சென்னையில், நான் எதிர்கொண்ட கேள்விக்கான பதில், மேல் கூறிய என் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது என்பதை நீங்களும் நானும் புரிந்துக்கொள்ளலாம்தான். ஆயினும், அக்கேள்வி இன்னும் ஆழமானது என்பதாக உணர்கிறேன். அதற்கான பதிலை அக்கேள்வியை எதிர்கொண்ட பிறகே தேடத்துவங்கினேன். அத்தேடல் என் பால்ய காலம் வரை நீண்டு சென்றது என்பதுதான் ஆச்சரியம்.
“நான் ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும்..? எனக்கு ஏன் ஒளிப்பதிவு பிடித்தது..?” இதுதான் ஆதாரக்கேள்வி.
ஏன் என்றால் எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும். சரி.. திரைப்படங்கள் பிடிக்குமென்றால் இயக்குநராகவோ, நடிகனாகவோ, பாடலாசிரியராகவோ, இசையமைப்பாளனாகவோ, கதை வசனகர்த்தாகவோ அல்லவா முயன்று இருக்கவேண்டும்..! அதை எல்லாம் விடுத்து, ஏன் ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது..!? இதற்கான பதில், என் பால்யத்திலிருந்து என்னைத் தொடர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன்.
சிறுவயதில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள், அதன் உந்துதலில் வரைதல் என்ற பெயரில் கிறுக்கிய கோடுகள், குடும்ப விழாக்களில் புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம், புகைப்படம் எடுக்கப்படுவதை விட, எடுப்பதில் காட்டிய ஆர்வம் என அதன் வேர்கள் எங்கோ பரவி விரிந்து கிடப்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.
படம் பார்த்து கதை சொல்லும் அச்சிறுவயது ஆர்வமும், பரவசமும் தான் பிற்காலத்தில் காட்சிகளின் மீதும் பிம்பங்களின் மீது ஆர்வத்தை தூண்டியன என்பதை யோசித்துப் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், இசையின் மீதிருந்த ஆர்வம், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், பயணங்கள் மீதிருந்த ஆர்வம் என பல காரணிகள் இருக்கின்றன, நான் ஏன் ஒளிப்பதிவுத்துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கு.
பின்பு, அக்கேள்வியை எதிர்கொண்ட போதெல்லாம் என் பதில் இப்படியாக இருந்தது..
“ஏன் என்றால்.. எனக்கு காமிக்ஸ் பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு ஓவியம் பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு புகைப்படங்கள் பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு இசை பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு புத்தகங்கள் பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு பயணங்கள் பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு திரைப்படங்கள் பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு அழகு பிடிக்கும்”
“ஏன் என்றால்.. எனக்கு கனவு பிடிக்கும்”
உண்மையில், ஓர் ஒளிப்பதிவாளனாக இருப்பதற்கு ரசனையே அடிப்படை.
ரசிக்கும் தன்மையே உங்களை ஒரு படைப்பாளியாக மாற்றும்.
சக உயிர்களின் மீதான அன்பும், கருணையுமே உங்களை மனிதனாக மாற்றும்.
அன்பும், கருணையும் உங்கள் ஆத்மாவோடு தொடர்புடையவை, ரசனையும், அழகுணர்ச்சியும் உங்கள் மனதோடு தொடர்புடையவை, அறவுணர்ச்சியும், சுய ஒழுக்கமும் உங்கள் நேர்மையோடு தொடர்புடையவை…!
அழகும் கற்பனைனையும் இணையும் போது படைப்பு பிறக்கிறது. அதோடு மனிதமும், அறமும் இணையும் போது கலைப் பிறக்கிறது.
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக