பெங்களூரிலிருந்து, சினிமா வாய்ப்புத்தேடி சென்னைக்கு கிளம்பிய போது, ஒரு புகைப்படக்காரனாக ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து பயிற்சி எடுத்திருந்தேன்.
இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது, புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான், ‘Deen Dayal Camera Service Center’ என்ற அந்த நிறுவனம் கண்ணில் பட்டது.
Canon, Nikon, Ricoh, Minolta, Yashica, Pentax என்று ஆறு கேமர நிறுவனங்களுக்கான அதிகாரப்பூர்வ பழுது பார்க்கும் நிறுவனம் அது. கேமராவின் அடிப்படையைத் தெரிந்துக்கொள்ள அதை விட ஒரு சிறந்த இடம் இருக்க முடியுமா?
கேமராக்குறித்தோ, அதனை பழுது பார்ப்பது குறித்தோ எவ்வித முன்னனுபவமும் இல்லாததவன் நான், என்றாலும் ‘விருப்பம்’ உந்தித்தள்ள, தைரியமாய் சென்று வேலைக்கேட்டேன். அந்நிறுவத்தின் மேலாளர் திரு.விஜய் அப்போது அங்கே இருந்தார். சில பல கேள்விகளுக்கு பிறகு…
“ஸ்குரு டிரைவர் பிடிக்கத்தெரியுமா?” என்றார்
“தெரியும்” என்றேன்.
ஒரு ஸ்குரு டிரைவரை என்னிடம் கொடுத்து ஒரு ஸ்குருவை கழட்டச்சொன்னார். நான் கழட்ட முயன்றேன். ஸ்குரு டிரைவரை எனக்கு எப்படி பிடிக்கத்தெரியுமோ அப்படி பிடித்தேன்.
அதனைப் பார்த்துக்கொண்டிருந்த விஜய், என்னை நிறுத்தச் சொன்னார்.
“உனக்கு ஸ்குரு டிரைவரை பிடிக்கத்தெரியவில்லை” என்றார்.
என் முகத்தில் அசடும், சோகமும் ஒன்றாய் வழிந்தது. பதட்டத்தோடு அவரையே பார்த்தேன்.
எப்படி பிடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். பிறகு என்னை வேலையில் சேர்த்துக்கொண்டார். ஏன் என்று தெரியவில்லை? சில சமயம் அப்படித்தான், முன் பின் தெரியாதவர்கள் நமக்கு உதவுவார்கள். நம் பயணத்தை இலகுவாக்குவார்கள். நாம் முன் நகர படிக்கல்லாய் இருப்பார்கள். எனக்கு அப்படி பலர் இருந்திருக்கிறார்கள்.
திரு. விஜய் அவர்களில் ஒருவர். வேலைக்கொடுத்தது மட்டுமல்ல, புகைப்படம் எடுக்கவும் சொல்லிக்கொடுத்தார். பழதுப்பார்க்க வரும் கேமராக்களை, பழுது நீக்கியப்பின், சரிபார்க்க புகைப்படம் எடுத்துப்பர்க்க வேண்டும் அல்லவா..!? அதை நான் செய்தேன். ஆயிரக்கணக்கான படச்சுருளில் படம் எடுத்தேன். பல்வேறு வகையான கேமராக்களை பயன்படுத்தினேன். கேமராவின் அடிப்படையும், புகைப்படத்துறையின் அடிப்படையும் விஜய் எனக்கு கற்றுக்கொடுத்தார். காலையில் கல்லூரி, மதியத்திற்கு பிறகு இங்கே என்று மூன்று வருடங்கள் பணிபுரிந்தேன். கூடவே புகைப்படத்துறைச் சார்ந்த புத்தகங்களையும் அறிமுகப்படுத்தினார். Better Photography, Popular Photography, National Geographic Magazine என்று பல்வேறு புத்தகங்களை படிக்கும் பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டேன்.
ஒளிப்பதிவின் அடிப்படையான புகைப்படக்கலையில் போதுமான அனுபவம் இருப்பதாய் நம்பிக்கை வர ஆரம்பித்தது, அதே நேரம் ஆனந்தவிகடன் பத்திரிக்கையின் மூலம் பெரும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.
வருடாவருடம் ஆனந்த விகடன் பத்திரிக்கை ‘மாணவ பத்திரிக்கையாளர்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆர்வமும் தகுதியும் கொண்ட மாணவர்களுக்கு பத்திரிகைத்துறையில் பயிற்சியும் வாய்ப்பும் கொடுப்பது. நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, அதற்காக நடத்தப்பட்ட போட்டியில் கலந்துக்கொண்டேன். இந்திய முழுவதுமிருந்து கலந்துகொண்ட பல ஆயிரம் மாணவர்களிலிருந்து, மூன்று கட்ட தேர்வுகளுக்கு பிறகு நாற்பது மாணவர்களை தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவனாக தேர்வாகியிருந்தேன். சென்னையிலிருந்து ஆனந்த விகடன் அலுவலகத்திற்கு அழைத்து, நேரடித்தேர்வும் பிறகு, சென்னை திநகரில் பயிற்சி வகுப்பு கொடுத்தார்கள். இது எனக்குள் பெரும் நம்பிக்கையை விதைத்தது.
நான் விகடனில் பணி புரிந்த காலத்தில், கூடவே கவிதா என்னும் தோழியும் பெங்களூரிலிருந்து விகடன் பத்திரிக்கையாளராக தேர்வாகி இருந்தார். பெங்களூரிலிருந்து பல்வேறு செய்திகளை எழுதியும், படமெடுத்தும் அனுப்புவோம். ஆனால் அவையெல்லாம் விகடனில் வராது. பெங்களூர் செய்தி தமிழகப்பத்திரிக்கைக்கு எப்படி தீனிப்போடும்!? பத்து செய்தி அனுப்பினால், ஒன்று பிரசுரம் ஆகும். பெரும் ஏமாற்றமாக இருக்கும். எதை எழுதுவது? எது செய்தியாக தகுதி கொண்டது? என்று குழப்பமாக இருக்கும். தினமும் எல்லா செய்தித்தாள்களையும் படிக்க சொன்னார்கள். தமிழ் ஆங்கில என்று எல்லா செய்தித்தாள்களும் வாங்கி குவித்து, ஆர்வமாய் படிக்கத்துவங்கினேன்.
இதுவெல்லாம் சில நாட்களுக்குத்தான், தொடர்ந்து படித்த போது, எது என்றைக்கான செய்தித்தாள் என்ற வித்தியாசமே தெரியாமல் போயிற்று… கிட்டத்தட்ட 80% செய்திகள் தினந்தோறும் ஒன்றுப்போலவே இருந்தன. செய்தித்தாள்களைப் படிப்பதை நிறுத்தி விட்டேன். பிறகு எப்படிதான் செய்தி சேகரிப்பது? மாணவ பத்திரிக்கையாளராகி விட்டால் மட்டும் போதுமா? நாம் எழுதும் செய்திகள் பிரசுரம் ஆகவேண்டாமா!?
அச்சூழலில்தாம், அச்சம்பவம் நடந்தது. தமிழகத்தையும் கர்நாடகத்தையும் ஒருசேர உலுக்கிய சம்பவம் அது.
கர்நாடக திரையுலகின் சூப்பர் ஸ்டார் ‘ராஜ்குமார்’ அவர்களை, வீரப்பன் கடத்திய சம்பவம்.
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக