இயக்குநர் பாரதிராஜா:
இளமையில், கல்லூரி காலங்களில் அப்படி ஒரு ஆசை இருந்தது. சாலையில் நடந்துக்கொண்டிருக்கும் போது, நம்மை கடந்து செல்லும் கார் சட்டென்று நின்று, அதிலிருந்து இறங்கும் அவர், நம்மை அழைத்து நீதான்யா என் அடுத்தப்படத்தின் கதாநாயகன் என்று சொல்லிவிட மாட்டாரா? அப்படி நடந்தா எப்படி இருக்கும்!? 😊 அவர் தன்னுடைய கதாநாயர்களை அப்படிதான் பிடிக்கிறார் என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றனவே..! என்று ஆசை(நப்பாசை) ஒன்று இருந்த காலமும் உண்டு.
பிற்காலத்தில், சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளனாக இயங்கியபோது, அவர் படமொன்றில் வேலை செய்யும் வாய்ப்பு அமைந்தது. நான் அதுவரை அவரை நேரில் பார்த்ததில்லை. அவரைப் பார்த்துவிடும் வாய்ப்பு மட்டுமில்லாமல், அவர்படத்தில் பணி புரியும் வாய்ப்பும் அமைந்த போது, அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. இப்போது நடிகனாக வேண்டுமென்ற கனவெல்லம் இல்லையென்றாலும் மனமெங்கும் ஒரு உற்சாகமும், எதிர்ப்பார்ப்பும் உண்டாகி இருந்தது.
‘பொம்மலாட்டம்’ திரைப்படம். என் குரு B.கண்ணன் அப்படத்தின் ஒளிப்பதிவாளர். அதில் நான் இணை ஒளிப்பதிவாளர். படபிடிப்பு கோவாவில். இயக்குநர், ஒளிப்பதிவாளர், மேளாலளர்கள் என எல்லோரும் முதல்நாள் சென்றுவிட்டார்கள், நாங்கள் அடுத்த நாள் நள்ளிரவு சென்று சேர்கிறோம். அடுத்தநாள் காலை, அறையில் படபிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது தொலைபேசி அழைப்பு வருகிறது, சீக்கிரம் வாருங்கள், இயக்குநர் தயாராகி வந்துவிட்டார் என்று… பதட்டத்தோடு அறையின் சன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறேன். அங்கே படபிடிப்புக்குத் தயாராக வாகனங்கள் நின்றுக்கொண்டிருக்கின்றன, பலரும் கூடி இருக்கிறார்கள். அக்கூட்டத்தின் நடுவில் இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா நின்றுக்கொண்டிருக்கிறார். நான் முதன் முறையாக அவரைப் பார்த்தேன். அவரைப்பற்றி கேட்டறிந்த செய்திகளும், அவருடை திரைப்படங்கள் நம்மீது ஏற்படுத்திய தாக்கங்களின் வழியாகவும், அவரைக்குறித்து நாம் கற்பனை செய்து வைத்திருந்த அதே கம்பீரத்தோடு இருந்தார். நாங்கள் வேகவேகமாக கிளம்பி ஓடினோம்.
அவர் முன் காரில் செல்ல, நாங்கள் அடுத்தக்காரில் பின் தொடர்ந்து, படபிடிப்புத்தளத்திற்குச் சென்றோம். படபிடிப்பு தொடங்கியது. அவர் இயங்கும் விதத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தனை சுறுசுறுப்பும், முழுமையான ஆளுமையும் அவரிடமிருந்து வெளிப்படுவதை காண ஆர்வமாக இருந்தது. பொம்மலாட்டம் திரைப்படம் முதலில் ‘இந்தியில்’ தான் எடுக்கப்பட்டது. ‘நானா பட்டேக்கர்’ ‘அர்ஜூன்’ இணைந்து நடிக்கும் படம். எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்படம் முதல் படமாக, அதாவது இயக்குநர் இமயத்தின் திரைப்படத்தில் முதன்முறையாக பணிபுரியும் வாய்ப்பாக அமைந்தது அப்படம்தான். நானா பட்டேக்கர், அர்ஜூன் மட்டுமல்லாமல் ‘காஜல் அகர்வால், ருக்மணி’ போன்றோர்க்கு அதுதான் முதல் படம். காஜல் அகர்வாலுக்கும், ருக்மணிக்கும் அறிமுகப்படமும் கூட. அதனால் எல்லோருக்கும் இயக்குநரின் மீது ஒரு பயம் கலந்த, மரியாதை இருந்தது. படபிடிப்புத்தளம் அமைதியாகவே இருக்கும். பொதுவாக படபிடிப்புத்தளம் கொஞ்சம் இரைச்சல் நிறைந்தது. ஆனால் இங்கே அப்படி இல்லை. இயக்குநரின் குரலைத் தவிர பிற குரல்கள் கேட்கவில்லை. ஒளியமைப்பு செய்யும் போது கூட அமைதியாக, சைகை மொழியில் பேசிக்கொண்டோம். காரில் போகும்போது கண்ணன் சார், எச்சரித்திருந்தார்…”எப்பா… இயக்குநர் ரொம்ப கோவக்காரர், ஷூட்டிங்கில் தேவையில்லாத சத்தம் வரக்கூடாது, அப்படி வந்தா அவ்வளவுதான்… வீட்டுக்கு வண்டி ஏத்திடுவாரு” என்று பலக்கதைகளை சொல்லிக்கொண்டு வந்தார். இயக்குநருக்கும் படபிடிப்புத்தளத்தில் கூட்டம் இருக்க கூடாது, சத்தம் இருக்க கூடாது, தேவையில்லாத வேலைகளை பார்க்க கூடாது, அவருடைய படத்தில் தொடர்ந்து பணி செய்ய வேண்டுமென்றால், அவருடைய ‘குட் புக்கில்’ இடம் பிடிக்க வேண்டும். அதுமட்டுமே ஒரேவழி என்றார். அதனால் மனதெங்கும் ஒரு பயம் இருந்தது.
அமைதியாக வேலைப்பார்த்தோம். அந்தப்படம் இந்திப்படம் என்பதனாலும்… மேலும் அது ஒரு கிரைம் ஸ்டோரி என்பதனாலும் அதனுடைய ஒளிப்பதிவில், ஒளியமைப்பில் மிகுந்த கவனத்தை செலுத்தினோம். அதுநாள் வரை, பாரதிராஜாவின் படங்களில் பயன்படுத்தப்பட்ட ஒளியமைப்புப்போல் இல்லாமல், கொஞ்சம் நவீன தன்மையை கொண்டு வர முயன்றோம்.
ஒளிப்பதிவில் இரண்டு முறை இருக்கிறது…
ஒன்று அழகியல் (Pictorialism, an approach to photography that emphasizes beauty of subject matter, tonality, and composition rather than the documentation of reality) சார்ந்தது, மற்றொன்று இயல்புத்தன்மையை (realism, in the arts, the accurate, detailed, unembellished depiction of nature or of contemporary life) சார்ந்தது.
நம்முடைய பெரும்பாலான வணிகப்படங்கள் அழகியல் சார்ந்த ஒளிப்பதிவைத்தான் கையாளுகின்றன. அதாவது, ஒளி எங்கிருந்து வருகிறது, அதன் மூலம் என்ன? என்பதைப்பற்றி எல்லாம் கவனிப்பதில்லை, அக்காட்சியை அழகுற படம் பிடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். ஒளிப்பதிவின் ஆதார விதிகளுக்கு உட்பட்ட, Three Point Lighting, Half Light, Back Light, Rim Light, Rembrandt Lighting போன்றவற்றை தெளிவாக பின்பற்றி அழகுற படம் பிடிக்கப்படும். இது ஹாலிவுட்டிலிருந்து, நம்மூர் படங்கள் வரை பின்பற்றப்படும் ஒரு முறை.
அதே சமயம், இயல்பான திரைப்படங்களில், உதாரணமாக… பாரதிராஜாவின், பாலுமகேந்திராவின் திரைப்படங்கள், பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ ‘கல்லூரி’, ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’, லெனின் பாரதியின் ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ போன்றப்படங்களை சொல்லலாம். இதில் ஒளிப்பதிவும், ஒளியமைப்பும் இயல்பாக இருக்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். கம்போசிஷன், லென்ஸ் பயன்பாடு, சுடுவு (ஷாட்ஸ்) அமைக்கும் விதம், கேமரா நகர்வு என எல்லாமே, மிகுந்த பொருட்பாடோடு அமைக்கப்பட்டிருக்கும். எவ்விதத்திலும் காட்சியை மீறி துறுத்திக்கொண்டு ஒளிப்பதிவின் அழகு வெளிப்பட்டு விடக்கூடாது என்ற கவனம் இருப்பதைக் கவனிக்கலாம்.
நீங்கள், சுலபமாக புரிந்துக்கொள்ள சொல்லவேண்டுமானால், இப்படி சொல்லலாம்… ‘அதிக மேக்கப் போட்ட முகம், அளவோடு சீராக திருத்தப்பட்ட முகம்’. எது நம்மை கவர்கிறது என்பது சூழலைப்பொறுத்தும், அவரவர் ரசனையைப்பொறுத்தும் மாறும். அதுபோல, கதை எதை கேட்கிறதோ அதன் அடிப்படையில் ஒளிப்பதிவு, ஒளியமைப்பு செய்வார்கள்.
அதுநாள் வரை, பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு ஒளியமைப்பு முறை என்பது ‘இயல்பு’ தன்மையில் இருந்தது. காரணம் அவருடைய கிராமத்து கதைக்களன். ஆனால் ‘பொம்மலாட்டம்’ ஒரு நகர்ப்புறத்தில் நிகழும் க்ரைம் ஸ்டோரி, மேலும் அது ஒரு இந்திப்படம். அதனால் ஒளியமைப்பில் ஒரு நவீன தன்மையை கொண்டுவரவும், இந்திப்படங்களின் தரத்திற்கு ஈடாகவும் இருக்க வேண்டுமென்று ‘Pictorialism’ முறை ஒளிப்பதிவு செய்தோம். அதனால், அதிக அளவு Lights, Rigs போன்றவைகளை பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. நடிகர்களைச் சுற்றி பல்வேறு Lights, Diffusion Frames போன்றவைகளை வைக்க வேண்டியதாக இருந்தது. அது நடிகர்களை சுற்றி ஒரு சிறு கோட்டையை ஏற்படுத்திவிடும். நடிகர்களின் அருகில் செல்ல வேண்டுமானால் கவனமாக இடித்துக்கொள்ளாமல் செல்ல வேண்டும்.
இயக்குநர் பாரதிராஜா, கேமராவிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் ‘Monitor’-ஐப் பார்ப்பதில்லை. நேரடியாக நடிகர்களை பார்த்து, அவர்களுடைய நடிப்பை மதிப்பிடக்கூடியவர். அங்கேதான் முதல் சிக்கல் வந்தது. கேமரா நடிகர்களுக்கு அருகில் இருந்தபோதும், இயக்குநருக்கான மானிட்டரை கொஞ்சம் தள்ளி அமைத்திருந்தோம். அவரால் அங்கே இருந்து நடிகர்களைப்பார்க்க முடியவில்லை. அதனைக்கண்ட அவர், எழுந்து வந்து கேமராவிற்கு பக்கத்தில் நின்று கொண்டு பார்க்கத்துவங்கினார். நாங்கள் மானிட்டர் பற்றி சொன்னபோதும், அதனை அவர் விரும்பவில்லை. பெரும்பாலும் கேமராவிற்கு அருகிலேயே இருந்தார். அதேப்போல காட்சியில் நடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் நடித்துக் காட்டினார். அது பின்புலத்தில் கடந்து செல்லும் துணை நடிகர் பாத்திரமாக இருந்தாலும், தோட்டத்தில் பெருக்கி கொண்டிருக்கும் வேலக்கார அம்மாவிற்கு, எப்படி பெருக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த ஃபிரேமில் அமைக்கப்பட்டிருக்கும் அத்தனை பொருட்களின் மீதும், நடிகர்களின் மீதும் அவருடைய கவனம், ஆளுமை இருந்தது. அவருக்குத் தெரியாமல் ஒரு சிறு துரும்பு கூட இருக்க முடியாது.
அதுநாள் வரை, நான் பணிபுரிந்த, பார்த்த இயக்குநர்கள் மானிட்டரின் எதிரில் அமர்ந்துக்கொண்டு “அதை எடுத்துவை, இதை எடுத்துவை, அவரை அனுப்பு, இவரை அனுப்பு” என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எழுந்து போய் வேலைப் பார்த்த முதல் இயக்குநர் பாரதிராஜாதான். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மரியாதையும் அவர் மீது ஏற்படுத்தியது. இதனை நான் என்னுடைய எல்லா இயக்குநர் நண்பர்களுக்கும் சொல்வது உண்டு. ஒருமுறை அவர் வேலை செய்வதை வந்து வேடிக்கையாவது பாருங்கள் என்று. அத்துணை சுறுசுறுப்பும், ஆளுமையும், அற்பணிப்பு கொண்ட இயக்குநர் அவர்.
அவரோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம், அன்பு, நட்பு… எல்லாவற்றையும் பிறகு ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜாவிற்கு இன்று பிறந்தநாள். தந்தையைப்போன்றவர் அவர். வாழ்த்த வயதில்லை. வணங்கி மகிழ்கிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா..!
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக