குறும்படங்களும் அதன் தேவையும்:
தற்போதெல்லாம் குறும்படம் எடுப்பது என்பது, ஒரு வணிகப்படத்தைப் பெறுவதற்கான வாய்ப்பாக… நுழைவுச்சீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது. இரண்டரை மணிநேரப்படத்தை சுருக்கி ஒரு குறும்படமாக அதனை காட்டி, பெரும்படத்தை பெற்றுவிடுவது நோக்கம்.
இது பலருக்கும் கைக்கொடுத்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ்…என்று பெரும் பட்டியலே இருக்கிறது. சொல்லப்போனால், திரைத்துறையில் இருப்பவர்களே, அதைத்தான் கேட்கிறார்கள். ஒரு கதையைச் சொன்னால், அதனை ஒரு குறும்படமாக எடுத்துக்கொண்டு வாருங்களேன், பார்க்கலாம் என்கிறார்கள். காரணம், சொல்லும் கதையை, திரையில் கடத்த அவருக்கு வருகிறதா? என்று கண்டு கொள்வதற்காக.
இது ஒருவிதத்தில் நன்மை பயக்கக்கூடியதுதான். இன்னொரு விதத்தில், சிக்கலானதும் கூட… பொருளாதார குறை, அதனால் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடு, நடிகர்களின் திறமை இன்மை, இடம், கலை சார்ந்த போதாமை என பல்வேறு குறைகளைக் கொண்ட படைப்பாக அது வெளிப்பட்டு, அதனால் தடைபட்டு விடும் வாய்ப்பு என இருமுனை கத்தியாக பதம் பார்த்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.
சரி அது இருக்கட்டும் ஒருபுறம்.
உண்மையில்… ஒரு குறும்படத்தின் தேவை என்ன?
ஒரு வணிகப்படத்தைப பெறுவதற்கான அறிமுகச்சீட்டா அது? அல்லது அதே களத்தை, கதையை சுறுக்கி பேசுவதா?
இல்லை…!
ஒரு வணிக்கப்படம் பேசமுடியாத, சாத்தியப்படாத கதையை, களத்தை அணுகுவதற்கும், பேசுவதற்குத்தான் குறும்படங்கள் பயன்படவேண்டும். மெல்லிய உணர்வுகளை, எளிய மனிதர்களை, தவிர்க்கப்பட்ட, தவிர்க்கப்படும் களங்களை, சொல்லத்துணியாத கதைகளை பேசுவதற்கும், பதிவுசெய்வதற்கும் குறும்படங்கள் ஒரு சுலப, எளிய கலை வடிவம்.
அவ்வகையில், ஒரு சிறு எண்ணத்தைவோட்டத்தை, சிறு கண்ணி திறப்புகளை கோடிட்டு காட்ட, குறும்படங்களை பயன்படுத்திட வேண்டும்.
‘குறும்படம் எடுப்பது எப்படி?’ என்ற தலைப்பில் ஒரு பயிற்சிப்பட்டறையை ஏற்பாடு செய்தபோது, அப்பயிற்சிப்பட்டறையில் ‘கசடற’ குறும்படத்தை எடுத்தோம். குறும்படம் எடுப்பது என்றானபோது, ஏதோ ஒரு கதையை எடுக்க முடியாது அல்லவா!? அதனால் இக்கதையை எடுத்தோம். எடுக்கப்பட்ட பிறகு பலருக்கும் அது பிடித்திருந்ததனால், அதனை முழுமைப்படுத்தி வெளியிட்டிருக்கிறோம்.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி, குறும்படங்களுக்கு ஏற்பட்டுவிடுகிற ‘பொருளாதார குறை, அதனால் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடு, புதிய நடிகர்கள், இடம், கலை சார்ந்த போதாமை என சில குறைகள், சிலருக்கு தோன்றியபோதும்’ அப்படத்தை எங்களால் முடிந்த அளவிற்கு முழுமைப்படுத்த முயன்று, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
குறும்படங்களைப் பொறுத்தவரை, அதனை அதன் ‘தொழில்நுட்ப நேர்த்தியால்’ மதிப்பிடக்கூடாது, அதன் ‘உள்ளடக்கம் மற்றும் நோக்கத்தையும்’ கொண்டே மதிப்பிட வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அவ்வகையில் ‘கசடற’ குறும்படம் பலருடைய விருப்பத்திற்கு ஒன்றாக அமைந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
‘கசடற’ வெளியான நாளிலிருந்து தினமும் தொலைபேசி அழைப்புகள் வருகிறது. பலருக்கும் இப்படம் பேசும் ‘மையக்கருப்பொருள்’ பிடித்திருக்கிறது. நடைமுறையில் எந்த அளவிற்கு அது சாத்தியப்படும் என்ற கேள்விக்குறி தொங்கி நிற்கும்போதும், அது சாத்தியப்பட வேண்டும், சாத்தியப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதை பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதில் பலரும் ‘பெற்றோர்கள்’ என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆம்…!
கலையின் நோக்கம் ஒன்றை சுட்டிக்காட்டுவது..!
ஒரு எண்ணத்தை விதைப்பது..!
ஒரு லட்சிய நோக்கை குறிப்பிடுவது..!
செய்யத்தவறிய ஒன்றை, செய்துக்கொண்டிருக்கும் பிழையை நோக்கி பார்வையை திரும்பச்செய்வது..!
கவனிக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் சக மனிதனின், சமூகத்தின் தோளில் கைபோட்டு அல்லது தோள் தட்டி அழைத்து, சுட்டிக்காட்டுவது. அவ்வளவுதான்.
அதனை சாத்தியமாக்குவது, செயலாக்குவது… செயல்பாட்டாளர்களின், சமூகத்தின் பொறுப்பு.
கலைஞன் ஒன்றை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுகிறான். வாய்ப்பிருந்தால் செயல்பாட்டில் பங்கும் கொள்கிறான். இல்லை என்றால் அடுத்த படைப்பை நோக்கி நகர்ந்துவிடுகிறான். அவன் வேலை படைத்தல்.
நேர்த்தியான, முறையான, தேவையான படைப்பை நோக்கி நகர்வது, அதற்கேற்ற தகுதியை உயர்த்திக்கொள்ளுவதும் அவனுடைய கடமை, பொறுப்பு.
(தொடரும்)
To Watch
Kasadara Short Film
#Kasadara Short film | Link in Bio #blenin |#ravisubramanian #chezhiyan #pcsreeram #vijayarmstrong #kasadara #shortfilm #tamil #education #tamilnadu #india #ghibran #ghibranmusic #ghibranmusical #cinematography #tamilcinema #திரைப்படமும் #tamilcinema
கருத்துகள்
கருத்துரையிடுக