பொதுவாக ஒரு சிறிய முதலீட்டுத் திரைப்படம் எடுக்க, 1.5 கோடியிலிருந்து 2 கோடி வரை ஆகும் என்பதையும், அப்பணம் எப்படியெல்லாம் செலவாகிறது, எதற்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதைப்பற்றியும் முந்தைய இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். (ஆர்வம் கொண்டவர்கள் அதனை படித்துவிட்டு, மேலே தொடருங்கள்)
கோடிகள் எதற்கு... சில லட்சங்களே போதும்(குறு முதலீடு), ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியும் என்று நம்புகிறவர்களை, சொல்பவர்களையும் நான் அறிவேன். அதுசரிதானா? அப்படி லட்சங்களில் ‘மட்டும்’ செலவு செய்து ஒரு திரைப்படத்தை எடுத்துவிட முடியுமா? என்று என்னைக்கேட்டால்...
முடியும் என்பதுதான் என் பதில்… ஆனால்…
தரமான திரைப்படமாக எடுத்துவிட முடியுமா? என்பதுதான் இங்கே தொங்கி நிற்கும் கேள்வி. அதற்குதான் பதில் தேட வேண்டியதாகிறது.
குறைந்த செலவில் (சில லட்சங்கள்) ஒரு தரமான திரைப்படம் எடுக்க பல்வேறு காரணிகள் இருக்கிறன.
முதலில், தரமான திரைப்படம் என்றால் என்ன? என்பதை நாம் விள(ங்)க்கிக் கொள்ள வேண்டும். இங்கேதான் பெரும்பாலும் சிக்கல் ஏற்படுகிறது. காரணம், தரமான திரைப்படம் என்பதை இங்கே பலரும், பலவிதமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஜனரஞ்சகமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள், கலைப்படங்கள், மக்கள் பிரச்சனையை பேசும் திரைப்படம், வாழ்வியலைப் பேசும் திரைப்படங்கள், உணர்வுகளை, உணர்ச்சியை கடத்தும் படங்கள் என்று பல்வேறு வரையறைகளை நாம் வைத்திருக்கிறோம். இதில் தரமான திரைப்படம் என்றால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று நினைவுக்கு வரும்.
எந்தப்படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், எல்லாவற்றிற்கு ஒரே ஒரு பொது விதி ஒன்று இருக்கிறது. அது ‘பார்வையாளனோடு உரையாடுவது’
அதாவது, நீங்கள் சொல்லும் கதை பார்வையாளனுக்கு செய்தியாக, தகவலாக போய் சேரக்கூடாது. உணர்வுப்பூர்வமாக அவனை அது தாக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கும் பார்வையாளன் ‘எதிர்வினை’ ஆற்ற வேண்டும். சிரிப்போ, துக்கமோ, அழுகையோ, ஆச்சரியமோ, அதிர்ச்சியோ, ஆர்வமோ, இணக்கமோ வெளிப்படுத்த வேண்டும். திரையில் ஊடாடும் கதாப்பாத்திரங்களை அவன் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். அவனாகவோ, பக்கத்துவீட்டுக்காரனாகவோ, நண்பனாகவோ, எங்கோ செய்தியில் படித்தவனாகவோ… இருக்கலாம். அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை உண்மை என்று நம்பவேண்டும். அப்போது பார்வையாளனுக்கும், திரையில் உயிர்த்தெழும் கதாப்பத்திரத்திற்கு இடையே ஒரு இழை உண்டாகும். அந்த இழை, கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பட்டு, இரண்டு பேரையையும் கடைசிவரை பிணைத்து வைக்க உதவும். அப்படி பிணைக்கப்பட்ட பார்வையாளன், திரைப்படத்தோடும், கதாப்பாத்திரங்களோடு உரையாட துவங்கிவிடுவான். இது நிகழ்ந்தே ஆகவேண்டும்.
எனில், ஒரு தரமான திரைப்படம் என்பது, ‘பார்வையாளனோடு உரையாடும் படம்’ என்று புரிந்துக்கொள்வோமா? அப்படி ஒரு திரைப்படம் உரையாடுவதற்கு, பல்வேறு காரணிகள் காரணமாக இருக்குமென்றேன் இல்லையா?
அது என்னென்ன?
- கதை
- திரைக்கதை
- கதாப்பாத்திரங்கள்
- வசனம்
- நடிகர்கள்
- நடிப்பு
- இயக்கம்
- ஒளிப்பதிவு
- கலை இயக்கம்
- படத்தொகுப்பு
- இசை
என்று பல்வேறு துறை சம்பந்தப்பட்டிருப்பதனால், இத்துறைச்சார்ந்த திறமையும், அனுபவமும் கொண்ட கலைஞர்களின் கூட்டு முயற்சியாகத்தான் ஒரு தரமான திரைப்படம் இருக்க முடியும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா? இருக்காது என்று நம்புகிறேன். எனில், அத்தகைய கலைஞர்களின் துணையில்லாமல், அனுபவம் இல்லாமல் ஒரு குறு முதலீட்டுப்படத்தை எடுத்து விட முடியும் என்று நம்புவது எத்தகைய மூடத்தனம்..!?
என் அனுபவத்தில் இப்படி குறு முதலீட்டில் திரைப்படம் எடுக்க முயற்சிப்பவர்கள், பெறும்பாலும் அனுபவம் அற்றவர்களாக, தகுதியான கலைஞர்களின் துணையில்லாமலும் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். தம்மிடம் போதுமான அளவு பணம் இல்லாததனால், குறு முதலீட்டுத் திரைப்படங்களை எடுக்க முயல்கிறார்களேத் தவீர வேற நோக்கம் இல்லை. அதனால் தான் அத்தகையப் படங்கள் தோல்வியில் முடிகிறது.
உண்மையில் நீங்கள் ஓர் குறு முதலீட்டுத் திரைப்படத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு முதலில் தேவைப்படுவது ‘ஒரு கதை அல்லது ஒரு கதாப்பாத்திரம்’ கூடவே திறமையும் அனுபவமும் வாய்ந்த கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள்.
சரி… முதலில் கதையைப்பற்றிப் பேசுவோம்…
பொதுவாக ஹீரோயிஸப்படங்கள், காதல் படங்கள், வாழ்க்கை வரலாறு படங்களைத்தாண்டி, சிறந்த திரைக்கதைகளை இப்படி வகைப்படுத்தலாம் என்கிறார்கள்…
A. ‘சராசரி மனிதர்கள்… அசாதரமான சூழலில் சிக்கிக்கொள்வது’ - அதாவது நம்மைப்போன்ற ஒரு சராசரி கதாப்பாத்திரம், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வது. ‘ரோஜா’ திரைப்படத்தில் ‘காதல் ஜோடி… காஷ்மீர் போராளிகளிடம் மாட்டிக்கொள்வது, கணவனை மீட்க போராடும் ஒரு எளிய காதல் மனைவி’. இதில் காதல் ஜோடியே பிரதானம். அவர்கள் சந்திக்கும் பிரச்சனை, சம்பவங்கள் இரண்டாவதாக இருக்கிறது.
B. ‘ஒரு அசாதரன சம்பவம்… அதை கையாளும் கதாப்பாத்திரங்கள்’ - அதாவது, விபத்து, கொலை, கொள்ளை, பெரும் ஆபத்து போன்ற ஒரு சம்பவத்தை தீர்த்து வைக்கும் அல்லது கையாளும் கதாப்பாத்திரம்’. அறம் திரைப்படத்தில் ‘குழிக்குள் விழுந்துவிடும் குழந்தை… அதனை மீட்டெடுக்கும் ஆட்சியர்’. இதில் பிரச்சனை, சம்பவமே பிரதானம். அதனை கையாளும் கதாப்பாத்திரங்கள் இரண்டாவதாக வருகிறார்கள்.
யோசித்துப்பார்த்தல், எந்தவொரு தரமான திரைப்படத்தையும், இப்படி இரண்டு வகைமையில் பிரித்துவிட முடியும்.
உதாரணத்திற்கு சிலப்படங்கள்.
A. ஜெய்பீம், மகாநதி, அன்பே சிவம், பம்பாய், ஹேராம், பொல்லாதவன்…
B. போர்த்தொழில், அயோத்தி, கத்தி…
எங்கே… நீங்கள் சிலப்படங்களைச் சொல்லுங்கள் பார்க்கலாம். படத்தின் பெயர், அது எந்த வகைமையில் வருகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அல்லது A,B என்று குறிப்பிடுங்கள்.
- விஜய் ஆம்ஸ்ட்ராங்
#Cinema #tamilcinema #movies #MovieMaking #filmmaking #expenses #filmexperience #vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக