சிறு, குறு முதலீட்டுத் திரைப்படங்கள் எடுக்க முதலில் தரமான கதை வேண்டுமென்றேன். காரணம், பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களில், ஒரு பார்வையாளனை ஈர்க்க அல்லது உற்சாகம் கொள்ள வைக்க, பல்வேறு விஷயங்கள் இருக்கிறன.
உச்ச நட்சத்திர நடிகர், நடிகைகள் (Top Actors), பிரம்பாண்டமான அரங்குகள்(Sets), வெளிநாட்டு படபிடிப்பு (Foreign Locations), அசத்தலான பாடல்கள் (Top MUsic Directors, Best Songs), நடனங்கள் (Top Dance Masters), மிரட்டலான சண்டைக்காட்சிகள் (Top Fight Masters, Equipments) என்று பெரும் செலவு செய்து, கொண்டு வந்துவிட முடியும். யோசித்துப்பார்த்தல், நான் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும். இதில் கதை என்று ஒன்றை ‘கொஞ்சம்’ வைத்தால் போது, படத்தை காப்பாற்றிவிட முடியும். அதைத்தான் நம்முடைய ‘கமர்ஷியல் திரைப்படங்கள்’ தொடர்ந்து செய்து வருகின்றன. ஆனால், ஒரு குறு முதலீட்டுத் திரைப்படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பிருக்காது, பார்வையாளனை முழுமையாக இரண்டு, இரண்டரை மணி நேரம் கவர்ந்து வைத்திருக்க வேண்டுமானால், கதை மட்டுமே அதை செய்ய முடியும்.
தமிழில் அப்படி குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படங்களை கொஞ்சம் கவனித்துப்பார்த்தல் இதை புரிந்துக்கொள்ள முடியும்.
காதல், மைனா, பீட்சா, மேற்கு தொடர்ச்சி மலை, ஜோக்கர், அருவி, லவ் டுடே, மாநகரம் என்று சிலப்படங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படங்கள் யாவும், உங்களை கட்டிப்போடும் கதையும், திரைக்கதையையும் கொண்டிருந்தன என்பது புரியும்.
எனில், தரமான கதையையும், திரைக்கதையை எழுத அனுபவமும், திறமையும், வாழ்வியலும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமையடையும். மேலே குறிப்பிட்ட இயக்குநர்கள், அதன் திரைக்கதை ஆசிரியர்களைப்பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டாலே அவர்களுடைய திறமையும், ஆற்றலையும் புரிந்துக்கொள்ளலாம்.
அதுப்போலவே… ஒரு கதையை திரைப்படமாக்க, திரைப்படத்துறையில் அனுபவம் வேண்டும். தனித்தனியாக இருக்கும் பூக்களை கோர்த்து, மாலை ஆக்குவது போல… காட்சிகளாக, சுடுவுகளாக(ஷாட்) படம் பிடித்து தொகுத்து, வசனம், ஒலி, இசை சேர்த்து… கோர்த்து பார்க்கும் போதுதான் ஒரு திரைப்படம் முழுமையடைகிறது. இந்த பிரித்துப்போட்டு கோர்க்கும் கலையை புரிந்துக்கொள்ள, கைக்கொள்ள அனுபவ அறிவு ‘கண்டிப்பாக’ வேண்டும்.
‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பார்கள். அதாவது தொடர்ந்து பயிற்சி செய்தால் தான் ஓவியம் வரைய கற்றுக்கொள்ள முடியும். ஓவியத்திற்கே அப்படி என்றால், எழுத்து, இசை, படத்தொகுப்பு, வண்ணம், ஒலி என்று பல்வேறு கலைகளின் தொகுப்பான திரைப்படத்தை எடுக்க எத்தகைய அனுபவமும், பயிற்சியும் வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் ரசித்த ஒரு குறு முதலீட்டுப்படத்தை இயக்கிய, இயக்குநரின் பின்புலத்தை, அனுபவத்தை தெரிந்துக்கொள்ளுங்கள். அவரால் எப்படி ஒரு தரமான திரைப்படத்தை தர முடிந்தது. அதற்கு பின்னே இருக்கும் உழைப்பை புரிந்துக்கொள்ளுங்கள்.
பொத்தம் பொதுவாக, வெற்றிப்பெற்ற இயக்குநர்களின் பேட்டிகளை பார்த்து ஏமார்ந்துப்போகாதீர்கள்.
‘நான் யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை… நேரடியாக திரைப்படம் இயக்கிவிட்டேன்’ என்று பேட்டிக்கொடுக்கும் வெற்றியாளரின், இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவரை மதிப்பிடாதீர்கள்.
உதாரணத்திற்கு… இயக்குநர் ‘கார்த்திக் சுப்புராஜை’ எடுத்துக்கொண்டால், அவர் ‘பிட்சா’ இயக்குவதற்கு முன்பாக குறைந்தது 20 குறும்படங்களையாவது இயக்கியிருப்பார். முறையான திரைப்படக் கல்லூரியில் படித்தவர். அந்த அனுபவங்கள் மூலம் அவர் பெற்ற திறமைதான், அவரை வெற்றியாளராக்கியது. இது எல்லா இயக்குநர்களுக்கும் பொருந்தும்.
இதனால், சொல்ல வருது என்னவென்றால்… திரைப்படத்துறையில் ‘முன் அனுபவம்’ இல்லாமல் ஒரு திரைப்படத்தை இயக்க முயற்சிக்காதீர்கள். குறைந்த பட்சம் பல குறும்படங்களையாவது இயக்குங்கள். அதனை பொதுவெளிக்கு கொண்டுவந்து, உண்மையான அதன் தரத்தை புரிந்துக்கொள்ளுங்கள்.
விருப்பு, வெறுப்பு அற்ற… நேர்மையாக உங்கள் திரைப்படங்களை அணுகுங்கள். குறைந்த பட்சம் உங்களுக்காவது நேர்மையாக இருங்கள். உங்களுக்கு எது தெரிந்திருக்கிறது, எது தெரிந்திருக்கவில்லை என்பதை புரிந்துக்கொண்டு, அதனை வளர்த்துக்கொள்ளுங்கள்.
திறமையும், அனுபவமும் மட்டுமே வெற்றிக்கான ‘குறுக்கு’ வழி. மற்றவை எல்லாம்… அதிக ‘செலவு’ பிடிப்பவை.
போலவே… உங்களுடைய ‘தொழில்நுட்பக்குழு’வையும் தேர்ந்தெடுங்கள். அவர்களுடைய அனுபவத்தையும், திறமையை கணக்கில் கொள்ளுங்கள். உங்களோடான நட்பும், நெருக்கமும் மட்டும் போதாது. பெரும்பாலும் அது ‘உங்கள் தோளின் மீது ஏற்றப்பட்ட பாரங்களாக’ மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாகவே…
‘வெற்றி என்பது சுலபத்தில் வருவதில்லை என்பதை நாம் அறிவோம்.
திரைப்பட வெற்றி என்பது ‘அவ்வளவு’ சுலபத்தில் வருவதில்லை.’
குறு முதலீட்டுத் திரைப்படங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம், கருவிகளைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
(தொடரும்)
#Cinema #tamilcinema #movies #MovieMaking #filmmaking #expenses #filmexperience #vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக