Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா- நேர்த்தியான படைப்பு


"விண்ணை தாண்டி வருவாயா"வில் உயர்ந்த ரசனையையும், உண்மையான காதலையும், சிறந்த தொழில் நுட்பத்தையும், தகுதி வாய்ந்த கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

இந்த படத்தின் கதையைப்பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. ஏனெனில்.. காதலித்த அனைவருமே அதைத் தாண்டித்தான் வந்து இருப்பார்கள். யதார்த்தமான கதை, நம் வாழ்க்கையிலையே நடந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் கொண்ட காட்சியமைப்புகள், நாமே பேசின, கேட்ட, பழகின
வசனங்கள், நாம் அனுபவித்த உணர்வுகள் என படம் முழுக்க விரவி கிடக்கிறது.

தமிழில் நாம் நிறைய காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். நெகிழவைத்தவை, அழவைத்தவை என அதில் சில படங்களுண்டு. அந்த படங்களெல்லாமே சினிமா என்ற எல்லைக்குள்ளிருந்தே செயல்பட்டு இருக்கின்றன. இங்கே தான் இந்த படம் வித்தியாசப்படுகிறது. சினிமாவின்
எல்லா கட்டுப்பாடுகிலிருந்தும் உங்களை விடுவித்து முழுமையான காதலை, வாழ்க்கையை உணரவைக்கிறது.

தொழில்நுட்பம் என்று பார்த்தால்.. உயர்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில்நுட்ப விதிகளுக்குள் கட்டுப்படாமல் தன் தேவை, ரசனை, படைப்பு என சுதந்திரமாக எல்லைகளைக் கடந்து உருவாகிருக்கிறது.

இனிமையான பாடல்களும், நுட்பமான பின்னணி இசையும், எதார்த்தமான ஒளியமைப்பு மற்றும் அழகியலோடு கூடிய ஒளிப்பதிவும், ரசனையான ஆடைவடிவமைப்பு, வண்ண மயமான கலையமைப்பு, மனதை மயக்கும் வெளிப்புறத்தளம் என படம் முழுவதையும் மிக உயர்ந்த ரசனையில் உருவாக்கிருக்கிறார்.

சிம்பு, திரிஷா இருவருக்குமே இது மிக முக்கியமானப் படம். அவர்களின் வாழ்நாளில் இதுவரை கிடைக்காத கதாபாத்திரம். இருவருமே மிக நிறைவாக, சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

திரைப்படமென்பது.. ஒரு கதை, அதை சொல்லுவதற்கான கதாப்பாத்திரங்கள் என்ற முறையில் சொல்லுவது ஒருவிதம். சில கதாபாத்திரங்கள்,  அவர்களுடைய கதை என சொல்லுவது இன்னொரு முறை. இந்த படம் இரண்டாவது முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிம்பு(கார்த்திக்), அவருடைய அப்பா, அம்மா, தங்கை..

திரிஷா(ஜெசி), அவருடைய அப்பா, அம்மா, அண்ணன்..

கணேஷ் (ஒளிப்பதிவாளர்)எனும் சிம்புவின் நண்பர் ..

சிம்புவுக்கு வேலைத்தரும் இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார்..

இவ்வளவுதான் இந்த படத்தின் கதாப்பாத்திரங்கள். இவர்களில் சிம்பு, திரிஷா, நண்பர் என மூன்று கதாபாத்திரங்களை முக்கியமாகக் கொண்டு இக்கதை நகருகிறது. நண்பர் கதாபாத்திரமும் மிக நன்றாக கையாளப்பட்டிருக்கிறது, மற்ற படமாகிருந்தால் நண்பரின் கதாப்பாத்திரத்திற்கு பிரபல
நகைச்சுவை நடிகர் யாரையாவது போட்டிருப்பார்கள், ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிமுக நடிகரைப் பயன்படுத்திருக்கிறார். அந்த நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இதுவும் கூட படத்தின் இயல்புத் தன்மையை அதிகமாக்கியிருக்கிறது.

இயக்குனர் எந்த காட்சியையும் கற்பனையில் மட்டும் உருவாக்கியிருக்க முடியாது, எல்லா காட்சிகளின் சாரமும் இயக்குனரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அல்லது தவறவிட்ட கணத்தை, வாழ்க்கையை பின்நாளில் யோசித்த போது இப்படிப் பேசி இருக்கலாமோ, நடந்திருக்கலாமோ என்ற அவரின் தவிப்பை பூர்த்தி செய்யக்கூடிய, வாழ்க்கையின் நிறைவை நோக்கி நகரக்கூடிய பார்வையாகத்தான் இருக்கிறது.

படமாக்கிய விதத்தையும் குறிப்பிடவேண்டும். வழக்கமான முறையில் "shot division" செய்யாமல், நீளமான, மிக நீளமான shots ஆக காட்சிப்படுத்திருக்கிறார். அதை அவர்கள் "Compose" செய்தவிதமும், "Movements"-உம், ஒளியமைப்பும் இந்த படத்தைப் பார்வையாளனின் கண்முன் நிகழ்வதாக எண்ணவைக்கிறது.

பொதுவாக எல்லாத் துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பிறகு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், படைப்பு உருவாகும் என்பார்கள். அப்படி சினிமாவிலும் உண்டு. முந்தைய காலங்களில் அதற்கான உதாரணங்கள் உண்டு. அவ்வரிசையில் இப்படம் ஒரு
புதுவகையான நிகழ்தளத்தில், யதார்த்தமான, ரசனையான, உண்மையான படைப்பாக்கத்தில் அடுத்த தலைமுறைப் படைப்பாக இருக்கிறது.

வீட்டுக்கு வந்த பின்பும், எண்ணி நெகிழ்ந்து போகக்கூடிய பல காட்சிகள் இப்படத்தில் உண்டு. இப்படி ஒரு படத்தைத் தந்ததிற்கு கவுதம் வாசுதேவ் மேனனுக்கு பாராட்டு சொல்வதோடு, நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.Monday, February 15, 2010

படச்சுருள் வேலைசெய்யும் முறை

படச்சுருள் என்பதை, ஒரு பக்கத்தில் ஒளியைப் பதியச்செய்யக்கூடிய வேதிப்பொருள்கள் (photographic emulsion) பூசப்பட்டிருக்கும் ஒரு நீண்ட 'பிளாஸ்டிக் பட்டை' (செல்லுலாய்டு அல்லது பாலிஸ்டரால் ஆனது) என விளக்கலாம்.

ஒளியினால் மாற்றம் அடையக்கூடிய (ஒளியை உள்வாங்கிக்கொள்ளும்) 'ஸில்வர் ஹலைட்' (Silver Halide) என்னும் வேதிப்பொருள் ஒரு மெல்லிய பட்டையில் (Gelatin) பூசப்பட்டிருக்கும். ஒளிப்பதிவு முடிந்தவுடன், படச்சுருளை 'லேபில்' (Lab)  'ப்ராஸஸ்' (Process) செய்யும் போது ஒளி பதிந்த பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள வேதிப்பொருள் நீக்கப்படுகிறது.

படச் சுருளில் பல அடுக்குகள் (Layers) உண்டு.

முதலில் இருப்பது பாதுகாப்பு அடுக்கு. புகைப்படத்தின் மீது போடப்படும் கண்ணாடியைப் போன்றது. கீறல் விழாமல் தடுப்பதற்கு.

அடுத்த அடுக்கு 'நீல வண்ண' ஒளியைப் பதிவுசெய்யும் (Blue Light Sensitive) தன்மை கொண்டது. 'டெவலப்' செய்யும் போது 'நெகட்டிவில்' (Negative) 'மஞ்சள்' (yellow) நிறமாக இது இருக்கும்.

அடுத்த அடுக்கு 'மஞ்சள்' (yellow) நிற 'ஃபில்டர்' (Filter)-ஆல் ஆனது. அதனால் இதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியிலிருக்கும் நீல வண்ணத்தைத் தடுக்க முடிகிறது. இந்த ஃபில்டர் 'புராஸஸிங்' (Processing) போது நீக்கப்படுகிறது.

அடுத்த அடுக்கு 'நீலம் மற்றும் பச்சை' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மை கொண்டது (Blue and Green Sensitive). முன்பே நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் பச்சை நிறத்தை மட்டும் பதிவு செய்கிறது. 'நெகட்டிவில்' (Negative) 'மெஜண்டா' (Magenta) வண்ணத்திலிருக்கும்.

அடுத்தது 'இண்டர் லேயர்' (Interlayer) என்னும் அடுக்கு. அதற்கு அடுத்திருக்கும் அடுக்கானது 'நீலம் மற்றும் சிவப்பு' வண்ணத்தைப் பதிவுசெய்யும் தன்மைகொண்டது (Blue and Red Sensitive). ஆனால் நீல வண்ணம் தடுக்கப்பட்டு விடுவதால் சிவப்பு வண்ண ஒளி மட்டும் இவ்வடுக்கில் பதிவு செய்யப்படுகிறது. 'நெகட்டிவில்' 'ஸியான்' (Cyan) வண்ணத்தைக் கொடுக்கும்.

உள்ளே செல்லும் ஒளியானது படச்சுருளின் அடிப்பாகத்தில் பட்டுப் பிரதிபலித்து மீண்டும் பதிவாக வாய்ப்புள்ளது. அதனால் பதியப்படும் காட்சியானது துல்லியமில்லாமலும், காட்சியைச் சுற்றித் தேவையற்ற 'ஒளித் தெளிப்பும்' (halation) உண்டாகும். அதைத் தடுக்க 'ஆன்ட்டி ஹலஷன் பேக்கிங்' (Anti halation Backing Layer) என்னும் அடுக்கு பயன்படுகிறது.

அதற்கு அடுத்ததாக படச்சுருளின் ஆதார அடுக்கு (Base).  ஒளியைப் பிரதிபலிக்காத தன்மைகொண்ட அடுக்கும் உண்டு. புராஸஸிங்கில் இது நீக்கப்படுகிறது.

ஒரு மெல்லிய படச்சுருளில் இத்தனை அடுக்குகளும் இருக்கின்றன. அறிவியியலின் / வேதியியலின் அற்புதங்களில் ஒன்று இது. இன்று நவீன அறியியலின் வளர்ச்சியில் படச்சுருள்களின் தேவை பின்னுக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டலின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. தற்போதைய டிஜிட்டல் கேமராக்கள் படச்சுருள்களை பயன்படுத்தாத போதும் படச்சுருளின் ஆதாரத் தத்துவத்தை புரிந்து வைத்திருப்பது அவசியம். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் CCD, CMOS சென்சர்களை புரிந்துக் கொள்ள அது உதவும். டிஜிட்டல் சென்சர்களைப் பற்றியும் அவை எப்படி பிம்பங்களை பதிவு செய்கின்றன என்பதைப்பற்றியும் வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.விளக்குகள்(lights)

ஒளிப்பதிவு செய்ய மிக ஆதாரமாக வெளிச்சம் தேவைப்படுகிறது. வெளிச்சத்தை உருவாக்க தரமான விளக்குகள் பல உண்டு. இவை ஒளியின் தன்மையையும் வண்ணத்தின் தரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளன.

ஆதார ஒளிகள்:

ஒளிப்பதிவுக்கு ஆதாரமாக இரண்டு ஒளிவகைகள் உபயோகிக்கப்படுகின்றன. ஒன்று சூரியனிலிருந்து பெறப்படும் ஒளி 'டே லைட்' (Day light - சூரிய வெளிச்சம்) என்றும் செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் ஒளி 'டங்ஸ்டன் லைட்' (Tungsten Light- இழை வெளிச்சம்) என்றும் கொள்கிறோம்.

சூரியனால் உருவாக்கப்படும் 'டே லைட்' நீல நிறத்திற்கு அருகில் அதாவது, நீல நிறத்தை அதிகமாக கொண்டுள்ள வெள்ளை ஒளியாக இருக்கிறது.

செயற்கை விளக்குகளால் உருவாக்கப்படும் 'டங்ஸ்டன் லைட்' (இழை வெளிச்சம்) மஞ்சளும் சிவப்பும் கலந்த ஒருவித காவி நிறத்தை (Warm Light - வாம் லைட்) தன்னுள் அதிகமாகக் கொண்டுள்ளது.

'டே லைட்'-ஐ செயற்கையாக உருவாக்க விளக்குகள் உண்டு. 'டே லைட்ஸ்' என்று அழைக்கப்படும் விளக்குகளிலிருந்து பெறப்படும் ஒளியானது சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியின் தன்மையை ஒத்திருக்கிறது.


மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட இவ்விரண்டு ஆதார ஒளிகளைப் புரிந்துகொள்வது மிக அவசியம். 'கெல்வின்' (Kelvin) என்பது வெப்பத்தை (Temperature) அளக்கப்பயன்படும் அலகு. அதாவது வெப்பம் வண்ணத்தையும் வண்ணம் ஒளியையும் நிர்ணயிக்கின்றன. இங்கு ஒளியின் வண்ணத்தைக் கொடுக்கும் வெப்பம் (Color Temperature) 'கெல்வின்' எனும் அலகால் அளக்கப்படுகிறது.

ஒரு கறுப்பு இரும்புத் துண்டை(Carbon Block) சூடாக்கினால் முதலில் அது சிவப்பு நிறமாகவும் பின்பு படிப்படியாக ஆரஞ்சு, மஞ்சளென மாறி நீல நிறமாக மாறுகிறது. அந்தக் கறுப்பு இரும்புத் துண்டு குறிப்பிட்ட நிறத்திற்கு மாறும் போது அதன் அப்போதைய வெப்பத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். அதன்படி குறிப்பிட்ட வெப்ப அளவைக்கொண்டு ஒளியின் அப்போதைய வண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம். கெல்வினை 'K' என்று குறிக்கிறார்கள்.

அதன்படி பார்க்க சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது காலையிலிருந்து மாலை வரை 5400K லிலிருந்து 25000K வரை மாறுபடுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் சூரிய ஒளியானது 5500K யிலிருப்பதால், 'டே லைட்' என்பது 5500K என்று நிர்ணயித்திருக்கிறார்கள். 'டே லைட்'-ஐ 5500K வெளிச்சத்தைத் தருவதற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள். 'டங்ஸ்டன் லைட்'-ஐ 3200K வெளிச்சத்தை தருவதற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.

(இவ்விரண்டு ஒளிகளின் அடிப்படையில் படச்சுருள்கள் தயாரிக்கப்படுவதை நாம் ‘படச்சுருள்கள்’ கட்டுரையில் பார்த்தது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்).

'டே லைட்'-ஐ உருவாக்க HMI, PAR மற்றும் KinoFlo போன்ற விளக்குகள் பயன்படுகின்றன. (உ.தா) 4KW, 2.5KW, 575W HMI - 6KW, 4KW, 1.2KW PAR - 10 BANK, 4 BANK KinoFlos.

'டங்ஸ்டன் லைட்'-ஐ உருவாக்க 5KW, 2KW, 1KW விளக்குகள் உண்டு.

Kinoflo Light

PAR Light

Tungsten Lights

KW என்பது 'கிலோ வாட்'(Kilo Watt) என்பதன் சுருக்கம்.

 'Watt' என்பது மின்சாரத்தை அளக்க பயன்படும் அலகு. அதாவது ஒரு விளக்கு எரிய அது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் அளவையும்கொண்டு அவ்விளக்கின் சக்தி கணக்கிடப்படுகிறது. 1KW விளக்கு என்பது அந்த, விளக்கு எரிவதற்கு 1000 வாட் (1KW =1000 Watt) மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் என்று பொருள்.

லென்ஸ் (Lens):
லென்ஸின் தேவை என்ன?
கேமராவிலிருந்து லென்ஸை எடுத்து விட்டு, ஒரு கறுப்பு அட்டையில் துளையிட்டு அதை 'லென்ஸ் மவுட்ன்டில்' (Lens Mount) சுற்றி ஒட்டிவிடுங்கள். துளையின் வழியாக மட்டும்தான் ஒளி உட்செல்ல வேண்டும். அதாவது ஒரு 'பின் ஹோல் கேமரா' (Pinhole Camera) மாதிரியான அமைப்பை உருவாக்கி, படம் எடுத்துப்பாருங்கள். படம் வரும். தலைகீழாக இருக்கும். அதிக 'எக்ஸ்போஷர்' (Exposure) தேவைப்படும். நாம் லென்ஸைப்பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? லென்ஸ் பிம்பத்தைத் தலைகீழாகத் திருப்பிப் பதிவுசெய்யும். லென்ஸ் குறைந்த வெளிச்சத்தையும் ஒன்று குவித்து கேமாராவுக்குள் அனுப்பும். இதனால் குறைந்த வெளிச்சத்திலும் படமெடுப்பது சுலபம். மேலும் பிம்பம் தெளிவாக இருக்கும். 'பின் ஹோல் கேமரா' அப்படியல்ல.  குறைந்த வெளிச்சத்தில் படமெடுப்பது கொஞ்சம் சிரமம்.

கிடைக்கும் ஒளியை ஒழுங்கமைத்து, ஒன்று குவித்து தெளிவான பிம்பத்தை பதிவுசெய்ய உதவுவதே லென்சின் வேலை என்பது இப்போது புரிந்திருக்கும்.


பொருளிலிருந்து பிரதிபலிக்கப்படும் ஒளியானது தெளிவாக, துல்லியமாக 'ஃபிலிம் கேட்' (film Gate)-இன் வழியே படச்சுருளின் மீது சரியாக விழச்செய்ய 'லென்ஸ்' (Lens) என்னும் அமைப்பு  பயன்படுகிறது.

ஒரு லென்ஸின் வழியாக அதிகபட்ச ஒளி உட்செல்வது என்பது அதன் சுற்றளவு(Diameter) மற்றும் 'ஃபோகல் லெந்த்' (Focal Length) ஆகியவற்றைப் பொறுத்தது.

ஃபோக்கல் லெந்த் (Focal Length):
'ஃபோகல் லெந்த்' (Focal Length) என்பது லென்ஸ் 'infinity'-இல் 'ஃபோகஸ்' செய்யப்பட்டிருக்கும்போது லென்ஸின் குவி மையத்திற்கும் (Optical Center of the Lens) 'பிம்பம் பதியப்படும் தளத்திற்கும்' (Film Plane) இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது. இந்த 'ஃபோக்கல் லெந்த்'-ஐக் கொண்டே லென்ஸை வகைப் பிரிக்கிறார்கள்.
நார்மல் லென்ஸ் (Normal Lens): 50mm
சாதாரணமாக மனிதக் கண்களால் பார்க்கப்படும் பார்வைக் கோணமும் 50mm லென்ஸினால் பார்க்கப்படும் கோணமும் கிட்டதட்ட ஒத்துப்போவதால் இது நார்மல் லென்ஸ் என்று அழைக்கப்படுகிறது. (50mm லென்ஸில், லென்ஸின் குவி மையத்திற்கும் (Optical Center of the Lens) 'பிம்பம் பதியப்படும் தளத்திற்கும்' (Film Plane) இடைப்பட்ட தூரம் 50mm -ஆக இருக்கும்)


வைடு ஆங்கிள் லென்ஸ் (Wide Angle Lens):
50mm லென்ஸினால் பார்க்கப்படும் கோணத்தைவிட அதிகப்படியான கோணத்தில் பார்க்கப் பயன்படும் லென்ஸ்கள் வைடு ஆங்கிள் லென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
(உ.தா) 42mm, 35mm, 24mm, 18mm, 14mm,...9.8mm


டெலி போட்டோ லென்ஸ் (Tele Photo Lens):
50mm லென்ஸினால் பார்க்கப்படும் கோணத்தைவிட குறைந்த அளவு கோணத்தில் பார்க்க உபயோகிக்கப்படும் லென்ஸ்கள் 'டெலி போட்டோ லென்ஸ்' என்று அழைக்கப்படும். இவ்வகை லென்ஸ்களில் பிம்பமானது அதன் ஆதார உருவ அளவுகளிலிருந்து பெரிதாக்கப்பட்டிருக்கும்.
(உ.தா) 75mm, 85mm, 100mm, 135mm


ஜூம் லென்ஸ் (Zoom Lens):
வைடு ஆங்கிள் லென்ஸ், நார்மல் லென்ஸ் மற்றும் டெலி போட்டோ  லென்ஸ்களின் கோணங்களை ஒரே லென்ஸில் மாற்றியமைக்கக்கூடிய அமைப்பைக் கொண்டது 'ஜூம் லென்ஸ்' என்று அழைக்கப்படுகிறது.
(உ.தா) 25mm - 250mm
அனமார்பிக் லென்ஸ் (Anamorphic Lenses):
அனமார்பிக் லென்ஸ்சுகள் 'ஸ்கோப் லென்ஸ்' (Scope Lens) என அறியப்படுகின்றன. பதிவு செய்யப்படும் காட்சியானது 50% அகலவாக்கில் குறுக்கப்பட்டு (Squeezes horizontally) பதிவு செய்யப்படுகிறது. அதனால் 50% அதிக பரப்பளவுக் காட்சியை அகலவாக்கில் பதிவு செய்ய முடிகிறது. பின்பு திரையரங்கில் ஒளிபரப்பும் போது குறுக்கப்பட்ட காட்சியானது பழைய நிலைக்கு நீட்டப்பட்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
ஒளியின் அளவு மற்றும் உள்வாங்கும் அளவைப் கட்டுப்படுத்தும் அமைப்பு (APARTURE):
ஒரு காட்சியைத் தெளிவாக, சரியாகப் பதிவு செய்ய படச்சுருளின் மீது விழும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. ஒளியானது படச்சுருளின் மீது படிய, லென்ஸ் அமைப்பை ஊடுருவி வரவேண்டியதாகிறது. லென்ஸில் அதனுள் ஊடுருவும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த ஒரு அமைப்பு உண்டு. அந்த அமைப்பை 'அப்பார்ச்சர்' (Aparture) என்கிறோம்.


'அப்பார்ச்சர்' என்பது, நம் கண்களில் உள்ள 'பாப்பாவை'ப் போன்றது. அதாவது ஒளி அதிகமாயிருக்கும் போது சுருங்கியும், குறைவாயிருக்கும் போது விரிந்தும், நம் கண்களுக்குள் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் அமைப்பைப் போன்றது.

இந்த அப்பார்ச்சரில் உள்ள தகடுகள் ஒரு வட்டவடிவத் துளையை உருவாக்குகின்றன. இந்தத் தகடுகளை நகர்த்தி துளையின் அளவைப் பெரிதாக்கவோ, சிறிதாக்கவோ செய்யலாம். இதன் மூலம் லென்ஸின் உட்செல்லும் ஒளியின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தத் தகடுகளை நகர்த்த ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒத்துப்போகும் ஏறுவரிசையில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.  அதாவது f 1, 1.2, 2, 2.8, 4, 5.6, 8 என்ற வரிசையில் குறிக்கப்பட்டிருக்கும். 'f' என்பது 'அப்பார்ச்சர்' என்பதைக் குறிக்கும்.


இவற்றில், முறையே ஒன்றிலிருந்து மற்றொரு எண் என்பது, அதன் முந்தைய எண் அனுமதிக்கும் ஒளி அளவைப் போன்று ஒரு மடங்கு அதிக ஒளியை உட்செல்ல அனுமதிக்கும். அதாவது எண் 'f2.8'-யில் செல்லும் ஒளியின் அளவைவிட 'f4'-யில் செல்லும் ஒளியின் அளவு ஒரு மடங்கு குறைவு. இந்த அளவை 'எக்ஸ்போசர்' (Exposure) என்கிறோம்.

'எக்ஸ்போசர்' என்பது படச்சுருளின் மீது விழும் ஒளியின் அளவையும் விழும் நேரத்தையும் (காலம்) பொருத்தது.

'எக்ஸ்போசர்' = ஒளியின் அளவு x காலம்
E = I x T
I = Intensity of Light ( ஒளியின் அளவு)
T = Time (காலம்)

ஒளியின் அளவு என்பது f-யின் மதிப்பைக் குறிக்கும், காலம் என்பது கேமராவில் படச்சுருள் ஒடும் வேகத்தைப் குறிக்கிறது.

'ஃபோகல் லெந்த்' -ஐ லென்ஸின் சுற்றளவால் வகுக்க லென்ஸின் 'அதிகபட்ச அப்பார்ச்சர்' (Maximum Aperture) கிடைக்கும். அதாவது 3 இன்ச் சுற்றளவு கொண்ட லென்ஸின் 'ஃபோகல் லெந்த்' 6 இன்ச் என்றால் அதன் அதிகபட்ச அப்பார்ச்சர் f/2. அதேபோல் 1 இன்ச் சுற்றளவு கொண்ட லென்ஸின் 'ஃபோகல் லெந்த்' 2 இன்ச் என்றால் அதன் அதிகபட்ச அப்பார்ச்சர் f/2 ஆகும். (6/3=2, 2/1=2).

ஒவ்வொரு லென்ஸிலும் f-stop-ஐ வரையறுத்து வைத்திருப்பார்கள். பொதுவாக அவை இப்படி இருக்கும். 1,  1.4,  2,  2.8,  4,  5.6,  8,  11,  16 மற்றும் 22.  f-stop-இன் மதிப்பு உயர உயர, அதிகரிக்கும் மதிப்பானது அதன் முந்தைய மதிப்பு உள் விடும் ஒளியின் அளவில் பாதி அளவு ஒளியைத்தான் உட்செல்ல அனுமதிக்கும். உதாரணத்திற்கு f/11 ஆனது அதன் முந்திய மதிப்பான f/8-இல் பாதி ஒளியைத்தான் உட்செல்ல அனுமதிக்கும். அதையே வேறுவிதமாகப் பார்த்தால் f/8 ஆனது f/11-ஐ விட ஒரு மடங்கு அதிக ஒளியை அனுமதிக்கும்.


ஞாபகத்தில் கொள்ளவேண்டியது, ஒவ்வொரு f-stop-க்கும் ஒளி இரட்டிப்பாகிறது என்பதைத்தான். அதாவது f/4 ஆனது f/11-ஐ விட 8மடங்கு அதிக ஒளியை உள் விடுகிறது. ஏனெனில் f/11-இன் ஒளியைப்போல் f/8-இல் இரண்டு மடங்கு, f/8-ஐ போல் f/5.6- இல் இரண்டு மடங்கு, f/5.6-ஐப் போல் f/4 இரண்டு மடங்கு வெளிச்சத்தை உட்புகவிடும். அதனால் f/11 விட f/4  8 மடங்கு அதிக வெளிச்சத்தை அனுமதிக்கும். (2 x 2 x 2 =8)

f-stop number குறையக் குறைய, ஒவ்வொரு மதிப்பிலும் ஒளி இரட்டிப்பாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

லென்ஸ் திறன் (Lens Speed):
லென்ஸின் குறைந்த மதிப்பு f-stop என்பது அதன் 'சுற்றளவையும்' மற்றும் 'ஃபோக்கல் லெந்த்'-ஐயும் பொறுத்து ஒவ்வொரு லென்ஸுக்கும் மாறுபடும். ஒரு லென்ஸின் குறைந்த f-stop f/1.9 - உம் மற்றொரு லென்ஸில் f/3.5-ஆகவும் இருக்கும். 'லென்ஸ் திறன்' என்பது ஒரு லென்ஸின் குறைந்த மதிப்பு f-stop-ஐப் பொறுத்தது. உதாரணத்திற்கு f/3.5 விட f/1.9 மதிப்புடைய லென்ஸ் 'fast lens' என்றும் f/3.5 லென்ஸ் 'slow lens' எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் f/3.5 விட f/1.9 அதிக ஒளியை அனுமதிக்கும். அதனால் குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிக்க உதவுவதால் அதன் திறன் (Speed) அதிகமாக இருக்கிறது எனக் கொள்கிறோம்.

பொதுவாக 'Wide-angle lenses' அதிக திறனும் (Fast Lens), 'Telephoto Lenses' குறைந்த திறன் (Slow lenses) ஆகவும் இருக்கும். காரணம் Telephoto Lenses - இல் அதிக கண்ணாடிகள் இருப்பதினால் அதன் நீளம் அதிகமாக இருக்கிறது. அதன் 'சுற்றளவு அதிக தடவை அதன் 'ஃபோக்கல் லெந்த்'-ஆல் வகுக்கப்படுவதினால் அந்த லென்ஸின் குறைந்த மதிப்பு f-stop அதிகமாக இருக்கிறது.


T-stops: 
சில லென்ஸில் T-stops குறிக்கப்பட்டிருக்கும். இதற்கும் f-stops-க்கும் என்ன வித்தியாசம்?

f-stops என்பது கணிதவியல் (Mathematical) சமன்பாடுகளால் குறிக்கப்படுவது. T-stops என்பது ஒவ்வொரு தனிப்பட்ட லென்ஸையும் தனித்தனியாக அது உள்விடும் ஒளியின் அளவைக் 'Light Meter' கொண்டு சோதித்துக் குறிக்கப்படுகிறது. 'True stops' என்பதின் சுருக்கம் T-stops. f-stops- உம் T-stops- உம்  ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி இல்லாத போது நாம் T-stops-ஐயே பயன்படுத்தவேண்டும். இரண்டு மதிப்புகளும் லென்ஸின் உருளையில் குறிக்கப்பட்டிருக்கும்.


படச்சுருள்கள் (Film Roles):படம் பிடிக்க தேவையான ‘Film'-ஐ தமிழில் ‘படச்சுருள்’ என அழைப்போம். இப்படச்சுருள்கள், ஒளியை அவை ஏற்கும் தன்மைக்கு ஏற்றவிதத்திலும், அதன் செயல்திறனின் அடிப்படையிலும் பல வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒளி வகைக்கான படச்சுருள்கள்:
ஒரு பொருளின் மீது விழும் ஒளியின் வண்ணத்தால் அப்பொருளின் ஆதார நிறம் மாறும். அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தின் மேல் விழும் சிவப்பு ஒளி அந்தக் காகிதம், சிவப்புக் காகிதம் என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தும். நீல ஒளி நீலக் காகிதமாக நினைக்கத் தூண்டும். இதை நாம் எல்லாரும் அனுபவத்தில் கண்டிருப்போம்.

ஆனால் நாம் வெள்ளைக் காகிதத்தை அறிந்திருப்பதனால், அதன் மீது விழும் ஒளி எந்நிறமானாலும் அது வெள்ளைக் காகிதம்தான் என்று மிகச்சுலபமாகத் தெரிந்து கொண்டுவிடுகிறோம். இதற்கு மூளையும், நம் நினைவாற்றலும், முந்தைய அனுபவமும் உதவுகின்றன.

ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு படச்சுருளினால் (Film) அப்படி உண்மையை உணர முடியாது. அது, தான் பார்க்கும் ஒளியை அப்படியே பதிவுசெய்கிறது. இங்கேதான் ஒரு பிரச்சனை. அதாவது ஒரு வெள்ளைக் காகிதத்தை 'டே லைட்'-இல் (Day light - சூரிய வெளிச்சம்) காட்டினால் அது வெள்ளைக் காகிதம் என்றும், செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்ட 'டங்ஸ்டன் லைட்'-டில் (Tungsten Light- இழை வெளிச்சம்) காட்டினால் அது வெள்ளைக் காகிதம்தான் என்றும் நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் படச்சுருள் (Film) சூரிய வெளிச்சத்தில் வெள்ளை நிற காகிதமாகவும், இழை வெளிச்சத்தில் காவி (warm) நிற காகிதமாகவும் பதிவுசெய்யும். அதாவது ஒரு படச்சுருளினால் இரண்டு வித ஆதார ஒளிகளைக் கையாள முடிவதில்லை. இச்சிக்கலைத் தீர்க்க இரண்டு விதமான படச்சுருள்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள்.

அதாவது 'டே லைட்' (Day light - சூரிய வெளிச்சம்) தன்மைக்கேற்ப ஒரு வகைப் படச்சுருளும் (Day Film), 'டங்ஸ்டன் லைட் (Tungsten Light- இழை வெளிச்சம்) தன்மைக்கேற்ப ஒரு வகைப் படச்சுருளும் (Tungsten Film) தயாரிக்கிறார்கள். முதலில் 'டங்ஸ்டன் ஃபிலிமும்' (Tungsten Film) பின்பு 'டே ஃபிலிமும்'(Day Film) கண்டுபிடிக்கப்பட்டது.

‘டே ஃபிலிம்'(Day Film):
டே ஃபிலிமானது (Day Film) பகல் வெளிச்சத்தில் பதிவு செய்யப்படும் வெள்ளைக் காகிதத்தை வெள்ளையாகயும், டங்ஸ்டன் லைட்டில் (Tungsten Light- இழை வெளிச்சம்) பதிவுசெய்யப்படும் வெள்ளைக் காகிதத்தைக் காவி நிறத்திலும்(Warm Color) பதிவுசெய்யும். (ஏனெனில் டங்ஸ்டன் லைட்டில் காவி நிறம் அதிகம்)


'டங்ஸ்டன் ஃபிலிம்'(Tungsten Film):
'டங்ஸ்டன் ஃபிலிம்' (Tungsten Film) செயற்கை விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட வெள்ளை காகிதத்தை வெள்ளையாகவும், சூரிய வெளிச்சத்தில் அதே வெள்ளை காகிதத்தை நீல நிறமாகவும் பதிவுசெய்கிறது. (ஏனெனில் சூரிய வெளிச்சத்தில் நீல நிறம் அதிகம்).

அதாவது 'டே ஃபிலிம்'(Day Film) நீலம் கலந்த ஒளியை வெள்ளையாகவும், 'டங்ஸ்டன் ஃபிலிம்'(Tungsten Film) காவி கலந்த ஒளியை வெள்ளையாகவும் பார்க்கிறது.

இதை இன்னும் விரிவாகப் பார்ப்போம். ஒளியின் தன்மையை - வண்ணத்தை 'கெல்வின்' (Kelvin) என்ற அலகால் அளக்கிறார்கள். 'கெல்வின்' என்பது வெப்பத்தை (Temperature) அளக்கப்பயன்படும் அலகு. அதாவது வெப்பம் வண்ணத்தையும், வண்ணம் ஒளியையும் நிர்ணயிக்கின்றன. இங்கு ஒளியின் வண்ணத்தைக் கொடுக்கும் வெப்பம் (Color Temperature) கெல்வினால் அளக்கப்படுகிறது.

ஒரு கறுப்பு இரும்புத் துண்டை (Carbon Block) சூடாக்கினால் முதலில் அது சிவப்பு நிறமாகவும் பின்பு படிப்படியாக ஆரஞ்சு, மஞ்சளென மாறி நீல நிறமாக மாறுகிறது. அந்தக் கறுப்பு இரும்புத் துண்டு குறிப்பிட்ட நிறத்திற்கு மாறும் போது அதன் அப்போதைய வெப்பத்தைக் குறித்துக் கொள்கிறார்கள். அதன்படி குறிப்பிட்ட வெப்ப அளவைக்கொண்டு ஒளியின் அப்போதைய வண்ணத்தைத் தெரிந்துகொள்ளலாம். கெல்வினை 'K' என்று குறிக்கிறார்கள்.

அதன்படி பார்க்க சூரியனிலிருந்து பெறப்படும் ஒளியானது காலையிலிருந்து மாலை வரை 5400'K விலிருந்து 25000'K வரை மாறுபடுகிறது. பெரும்பான்மையான நேரங்களில் சூரிய ஒளியானது 5500'K விலிருப்பதால், 'டே ஃபிலிம்'-ஐ 5500'K விற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள். செயற்கை விளக்குகளால் உருவாக்கப்பட்ட இழை வெளிச்சமானது 3200'K என்ற அளவிலிருக்கிறது. எனவே 'டங்ஸ்டன் ஃபிலிம்'-ஐ 3200'K விற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள்.

இன்னும் எளிமையாக சொல்வதானால் டே ஃபிலிமானது 5500'K  ஒளியை வெள்ளையாகவும், டங்ஸ்டன் ஃபிலிமானது 3200'K  ஒளியை வெள்ளையாகவும் பார்க்கின்றன.

டே ஃபிலிமை 3200'K இழை வெளிச்சத்தில் உபயோகிக்க '#80A' என்ற ஃபில்டரும், டங்ஸ்டன் ஃபிலிமை 5500'K சூரிய ஒளியில் உபயோகிக்க '#85' வகை ஃபில்டரும் உபயோகிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒளியின் தன்மையை மாற்றுகிறார்கள்.

இவ்வகை ஃபில்டர்கள் ஒளியின் வண்ணத்தைக்கொடுக்கும் வெப்பத்தின் அளவை மாற்றுவதின் மூலம் ஒளியின் வண்ணத்தை(தன்மை) மாற்றுகின்றன. ஃபில்டர்களைப் பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.


'ஃபிலிம் ஸ்பீட்' (Film Speed): 
மாறுபட்ட ஆதார ஒளிகளுக்கு ஏற்ப படச்சுருள்கள் இருப்பது போல, ஒளியின் அளவைப் பொருத்து பயன்படுத்தக்கூடிய படச்சுருள்களும் உண்டு. அதாவது அதிக அளவு ஒளியிருக்கும் போது பயன்படுத்த ஒருவகை படச்சுருளும், குறைவான ஒளியிருக்கும் போது பயன்படுத்தக்கூடிய வகையில் மற்றொரு வகைப் படச்சுருளும் பயன்படுத்தப்படுகின்றன.

குறைவான ஒளியமைப்பிருக்கும் போது கிடைக்கக்கூடிய குறைவான ஒளியையும் தேவையான அளவிற்கு உள்வாங்கிப் பதிவுசெய்ய படச்சுருளுக்குத் திறன் அதிகமாக இருக்கவேண்டும். அதாவது ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் வேகம் அதிகமாகத் தேவைப்படுகிறது. அதுவே அதிகமாக ஒளியமைப்பு இருக்கும் போது உள்வாங்கிக் கொள்ளும் திறன் குறைவாக இருந்தாலே போதுமானது. இதன் அடிப்படையில் மாறுபட்ட திறனுடைய (அ) வேகம் உடைய படச்சுருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

படச்சுருளின் திறனை (அ) வேகத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த அதன் தயாரிப்புச் செலவு அதிகரிப்பதோடு, படச்சுருளின் தன்மையும் நாம் விரும்பத் தகாதவாறு மாறுபடுகின்றன. பதிவு செய்யப்படும் காட்சியின் தரம் மாறுபடுகிறது. ஆழ்ந்து பார்ப்போமானால் படச்சுருளின் துகள்கள் (Grains), வெளிச்சம் மற்றும் நிழலுக்கான விகிதம் (Contrast) போன்ற காரணிகள் மாறுபடுகின்றன.

அது மட்டுமல்லாது அதிக திறன் (அ) வேகம் கொண்ட படச்சுருளைக் கொண்டு, அதிக ஒளியமைப்புக் கொண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும் போது சில நடை முறைச் சிக்கல்களும் உண்டு. தேவைக்கு அதிகமான பாரத்தை சுமப்பதைப் போன்றது அது. ஆகையால் அதிகமாக ஒளியமைப்பிருக்கும் போது குறைவான திறன் (அ) வேகம் கொண்ட படச்சுருளே போதுமானது.
எனவேதான் மாறுபட்ட ஆதார ஒளியமைப்புக்கு ஏற்பவும் (Temperature of Light - Day (or) Tungsten), கிடைக்கக் கூடிய ஒளியின் அளவை பொருத்தும் (Amount of Light) நாம் படச்சுருளைப் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படச்சுருளின் திறனை (அ) வேகத்தை ISO , ASA என்று குறிக்கிறோம்.

ISO என்பது INTERNATIONAL STANDARD ORGANISATION என்பதின் சுருக்கம்.
ASA என்பது AMERICAN STANDARD ASSOCIATION என்பதின் சுருக்கம்.

படச்சுருள்கள் 50 ASA, 100 ASA, 200 ASA, 500 ASA என்ற வகைகளில் கிடைக்கின்றன. அதாவது 50 ASA-ஐ விட 100 ASA என்பது ஒரு மடங்கு அதிகம் சக்தி வாய்ந்தது. அதே போல 100 ASA-ஐ விட 200 ASA ஒரு மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. அதன்படி 50 ASA-ஐ விட 200 ASA என்பது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.கேமரா

திரைப்பட உருவாக்கத்தில், பல கருவிகள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை எனத் தொடங்கி படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு என பல நிலைகளில் தேவை சார்ந்து பல கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. எழுதப்பட்ட ஒரு திரைக்கதை, ஒரு திரைப்படமாக உருமாற, முதலில் அத்திரைக்கதை செல்லுலாயிட் படச்சுருளில்(அல்லது டிஜிட்டலாக) பதியப்பட வேண்டும். நடிகர்களின் மூலமாக கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டி, கதையை நிகழ்த்திப் பதிவு செய்கிறோம். அப்படி பதிவு செய்வதை படப்பிடிப்பு என்கிறோம். அதைப்பதிவு செய்யும் கருவியை கேமரா (Camera) என்கிறோம்.

கேமரா என்னும் கருவியோடு இணைந்து பல தொழில்நுட்பங்கள் ஒரு காட்சியைப் படச்சுருளில் பதிவுசெய்ய உதவுகின்றன. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக வரும் கட்டுரைகளில் பார்க்கப் போகிறோம். முதலில் கேமரா என்னும் ஆதாரக் கருவியைப்பற்றி ஒரு அறிமுகம்.

ஒரு புகைப்படக் கேமராவை நாம் அறிவோம். அதன் செயல்படும் முறையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அறியாதவர்கள் அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதை நான் இங்கே விளக்கப்போவதில்லை. இக்கட்டுரைகள் ஒளிப்பதிவுத்துறையை சார்த்தது, புகைப்படத்துறையைச் சார்ந்தது அல்ல என்பதனால் என்னை மன்னியுங்கள். ஆக அவ்வடிப்படையை அறிந்தவர்கள் தொடருங்கள்.

திரைப்பட கேமரா:

திரைப்பட கேமரா என்பது படச்சுருளில் நிலையான பிம்பங்களை, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யும் ஒரு கருவியாகும்.

நிமிடத்திற்கு இத்தனை ஃபிரேம்கள் என்ற கணக்கில் பிம்பங்களை காமிரா பதிவுசெய்கிறது. திரைப்படம் என்பது சராசரியாக நிமிடத்திற்கு 24 ஃபிரேம்கள் என்ற கணக்கில் படம் பிடிக்கப்படுகின்றது. ‘ஸ்லோ மோஷன்’ (Slow Motion - 48fps..72fps), 'ஃபாஸ்ட் மோஷன்’ (Fast Motion - 16fps..21fps) போன்றவை சிறப்பு வகை ஒளிப்பதிவாகும். அதையும் இக்கேமராக்கள் பதிவு செய்து கொடுக்கும்.
திரைப்படக் கேமராவின் முக்கிய பொதுவான பாகங்கள்:

மேகசின்ஸ் - ஒளிபுகா படச்சுருள் பெட்டி:
பிம்பங்கள் பதிவு செய்யப்படாத படச்சுருளை காமிராவுக்கு வழங்கி பின்பு பிம்பங்கள் பதிவுசெய்யப்பட்ட அதே படச்சுருளை தன்னுள் வாங்கிப் பாதுகாக்கும் ஒரு ஒளிபுகா பெட்டியே மேகசின் எனப்படுகிறது.

மேலும், பிம்பம் பதிவு செய்யப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ அப்படச்சுருள் மீது தேவையற்ற வெளி வெளிச்சம் படக்கூடாது. அப்படி பட்டால் அப்படச்சுருள் வீணாகிப்போகும் என்பது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். ஆகையால் இப்பெட்டியானது ஒளி ஊடுருவாத தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமா என்ன.?

1. இரண்டு அறை மேகசின்: இதில் இரண்டு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட அறைகள் உண்டு, ஒன்றில் பதிவு செய்யப்படாத படச்சுருளும் மற்றொன்றில் பதிவு செய்யப்பட்ட படச்சுருளும் இருக்கும். பதிவு செய்யப்படாத படச்சுருளை வெளிவிடும் உருளை ‘Take off Spool’ என்றும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளை சேகரிக்கும் உருளை ‘Take Up Spool’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெட்டியின் ஒரு பக்க வெளிப்புறத்தில்  பதிவு செய்யப்படாத படச்சுருளின் அளவையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளின் அளவையும் தெரிந்துகொள்ள, அடியிலும் (ft) மீட்டரிலும் (mt) அளவீடுகள் உண்டு.

(உ.ம்) மிட்செல் கேமராக்கள் (Mitchell Cameras)

Mitchell Camera


2. ஒரு அறை மேகசின்: பதிவுசெய்யப்படாத படச்சுருளை வழங்கும் உருளையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளைப் பெற்றுக்கொள்ளும் உருளையும் ஒரே அறையில் வெவ்வேறு அச்சில் இருக்கும்.

(உ.ம்) ARRI III, ARRI 435
 ARRI III

ARRI 435


3.கோ ஆக்சில் மேகசின்: பதிவுசெய்யப்படாத படச்சுருளைக் கொண்ட உருளையும்,பதிவுசெய்யப்பட்ட படச்சுருளை வாங்கிக்கொள்ளும் உருளையும் ஒரே அச்சில் அருகருகே அமைக்கப்பட்டிருக்கும்.

(உ.ம்) ARRI BL4,535

535B

ARRI BL4படச்சுருளை இயக்கும் அமைப்பு (Pull Down Movement)

மேகசினில் இருந்து பதிவு செய்யப்படாத படச்சுருளை இழுத்து, பிம்பம் பதிவாகும் இடத்தில் சரியாக நிலை நிறுத்தும் செயலை 'புல் டவுன் மூவ்மெண்ட்' (pull down movement) என்கிறோம். படச்சுருளை கீழே இழுக்க 'கிளா' (claw) என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற அமைப்பு பயன்படுகிறது. 'ரிஜிஸ்டேஷன் பின்' (Registration Pin) என்று அழைக்கப்படும் ஊசியானது படச்சுருளில் உள்ள துளைகளைப் பயன்படுத்தி பிம்பம் பதிவாகும் இடத்தில் படச்சுருளை நிலையாக நிறுத்துகிறது.

படச்சுருளில் பிம்பம் பதிவாகும் அளவை (format) நிர்ணயிக்க 'ஃபிலிம் கேட்' (Film Gate) எனப்படும் அமைப்பும், படச்சுருளை பிம்பம் பதிவாகும் சரியான தளத்தில் (Plane)  நிறுத்த படச்சுருளின் பின்புறத்திலிருந்து அழுத்தி நிறுத்த 'ஃப்ரஷர் பிளேட்' (Pressure Plate) என்ற அமைப்பும் பயன்படுகிறது. இப்படி நிலையாக நிலை நிறுத்தப்பட்ட படச்சுருளில் தான் பிம்பமானது பதிவாகிறது. நிலையாக நிறுத்தப்படாமல் போனால், ’shake' ஆகி பிம்பமானது தெளிவில்லாமல் இருக்கும். புகைப்படம் எடுக்கும் போது நீங்கள் அதை உணர்ந்து இருக்கலாம்.


பிம்பம் பதிவுசெய்யப்பட்டவுடன் 'புல் டவுன் மூவ்மெண்ட்' (pull down movement) இயக்கத்தால் பதிவுசெய்யப்பட்ட படச்சுருள் கீழே நகர்வதால், பதிவுசெய்யப்படாத படச்சுருள் பிம்பம் பதிவாகும் இடத்தில் 'ரிஜிஸ்டேஷன்' பின்களால் மீண்டும் நிலை நிறுத்தப்படுகிறது.

'கிளா'வைப்(claw) பயன்படுத்தி 'புல் டவுன் மூவ்மெண்ட்' இயக்கத்தால் கீழே நகர்த்தப்படும் படச்சுருளானது 'ரிஜிஸ்டேஷன்' பின்களால் நிலை நிறுத்தப்பட்டு பிம்பம் பதிவுசெய்யப்பட்டவுடன் மீண்டும் கீழே நகர்த்தப்படுகிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மேற்சொன்ன அமைப்பை 'இண்டர்மிட்டண்ட் மெக்கானிசம் (intermittent mechanism) என்று அழைக்கிறோம். இதுவே கேமராவின் ஆதார செயல்பாடாகும்.


'ஃபிலிம் கேட்' (Film Gate)
படச்சுருளில் பிம்பம் பதிவாகும் பரப்பளவை நிர்ணயிப்பது 'ஃபிலிம் கேட்' ஆகும். இப்பரப்பளவு என்பது உயரத்தையும் அகலத்தையும் குறிப்பது. இதுவே 'ஆஸ்பெக்ட் ரேஷியோ'(Aspect Ratio) என்று அழைக்கப்படுகிறது. படமாக்கலில் பல விதமான 'ஆஸ்பெக்ட் ரேஷியோ'க்கள் உள்ளன.

(உ.ம்) 1:1.33,  1:1.66, 1:1.85 ....1:2.35


கேமராவை இயக்கும் சக்தி (Drive System)

கேமராவை இயக்க மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. இந்த மோட்டாருக்குத் தேவையான மின்சாரம் பேட்டரி மூலம் வழங்கப்படுகிறது.

மோட்டாரின் வகைகள்:

1.வேரியபுள் ஸ்பீட் மோட்டார் (Variable Speed Motor): மாறுபட்ட வேகங்கள் கொண்ட மோட்டார். தேவைக்கு ஏற்றாற்போல், சாதாரணமாக ஒரு நொடிக்கு 24 பிம்பங்களோ, அல்லது அதிகரித்தோ, குறைத்தோ பதிவுசெய்யத் தேவையான வேகத்தில் படச்சுருளை நகர்த்த இவ்வகை மோட்டார் பயன்படுகிறது.

2.கான்ஸ்டன்ட் ஸ்பீட் மோட்டார் (Constant Speed Motor):  நிலையான வேக மோட்டார். இதில் ஒரு நொடிக்கு 24 பிம்பங்களை மட்டுமே பதிவுசெய்ய முடியும், வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது.

3.கிரிஸ்டல் கண்ட்ரோல் மோட்டார் (Crystal Control Motor (or) Quartz):

4.வைல்டு மோட்டார் (Wild Motor): அதிவேக மோட்டார். மிக அதிக எண்ணிக்கையில், நொடிக்கு 100க்கும் அதிகமான பிம்பங்களைப் பதிவுசெய்ய பயன்படுகிறது.

5. இண்டர்லோ மோட்டார் (Interlo Motor):  சூரியன் தோன்றுவது, மறைவது, பூக்கள் பூப்பது போன்ற அதிக நேரங்கள் எடுத்துக்கொள்ளும் காட்சிகளைப் பதிவு செய்யப் பயன்படுகிறது. ஒரு நிமிடத்திற்கோ, ஒரு மணிக்கோ, ஒரு நாளைக்கோ ஒரு பிம்பம் நகரும்படி இதில் வேகத்தை அமைக்க முடியும். இவ்வகை படப்பதிவு ‘Time Lapse Photography' எனப்படுகிறது.கேமரா ஷட்டர் (Camera Shutter)

ஷட்டர் என்பது லென்சிலிருந்து வரும் ஒளியை படச்சுருளின் மீது விழ அனுமதிப்பதும் தடுப்பதுமான, ஒரு அச்சில் சுழலக்கூடிய அமைப்பாகும்.


லென்சுக்கு பின்புறம் பிலிம் பிளேனுக்கு (Film Plane) முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவ தட்டைபோன்ற இவ்வமைப்பு, லென்சின் வழியாக ஊடுருவி வரும் வெளிச்சத்தை, படச்சுருளில் விழாமல் தடுக்கவும் அனுமதிக்கவும் ஏற்ற அமைப்புக் கொண்டது. இது தொடர்ந்து சுற்றக்கூடியது. இப்படி சுற்றுவதின் மூலமாக ஒரு சமயத்தில் வெளிச்சம் படச்சுருளின் மீது விழச்செய்து பிம்பம் பதியப்பட்ட ஒரு பிரேமை(Frame) உருவாக்குகிறது. அடுத்த சமயம் வெளிச்சத்தை தடுப்பதின் மூலம், தொடர்ச்சியான படச்சுருளில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதாவது இந்த ஷட்டர் ஒளியை தடுக்கும்போது, பிம்பம் பதிவுசெய்யப்பட்ட படச்சுருளானது ‘புல் டவுன்’ செயல்பாடு மூலமாக நகர்த்தப்பட்டு, அடுத்த பிம்பம் பதிவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி நகர்த்தும் போது, இரண்டு பிரேம்களுக்கும் இடையில் குறிப்பிட்ட அளவு இடைவெளி உருவாக்கப்பட்டு தனித்தனி பிரேம்களாக பிம்பம் பதிவுசெய்யப்படுகிறது. அப்படி தனித்தனியாக பதிவுசெய்யப்பட்ட பிம்பங்களை நொடிக்கு 24 பிரேம்கள் என ஓடவிடுவதாலேயே, அந்த பிம்பங்களின் தொகுப்பு அசைபடமாக நம்மால் உணரப்பட்டு, நாம் திரைப்படத்தைக் கண்டுகளிக்க முடிகிறது. (நொடிக்கு 24 பிரேம்கள் ஏன் என்பதை வேறொரு கட்டுரையில் விளக்குகிறேன்)

இத்தகைய ஷட்டர்கள்  இரண்டு வகைப்படுகின்றன.

1.டிஸ்க் ஷட்டர் (Disc Shutter) - அரைவட்ட அமைப்புக் கொண்டது. டிஸ்க் ஷட்டர்-இல் (Disc Shutter) 180 டிகிரி அரைவட்டம் மறைக்கப்பட்டும், மற்றொறு 180 டிகிரி வெறுமையாகவும் இருப்பதனால் அது சுழலும் போது ஒரு பாதியால் ஒளி மறைக்கப்படுவதும் மறுபாதியால் அனுமதிக்கப்படுவதுமான செயல் நடைபெறுகிறது.

(உ.ம்)  மிட்செல் கேமராக்கள் (Mitchell Cameras)

2.பட்டர்பிளை ஷட்டர் (Butterfly Shutter) - பட்டாம்பூச்சியின் இறக்கை போன்று அமைப்புக்கொண்டது. பட்டர்பிளை ஷட்டரில் இரண்டு 90 டிகிரி கால்வட்டம் மறைக்கப்பட்டும், இரண்டு 90 டிகிரி கால்வட்டம் வெறுமையாகவும் அடுத்தடுத்திருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கால் பகுதியில் ஒளி மறைக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டு மீண்டும் மறைக்கப்பட்டு மீண்டும் அனுமதிக்கப்படுகிறது.

இப்பட்டர்பிளை ஷட்டர்-இன்(Butterfly Shutter) முன்பகுதியானது கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் பொருளாயிருப்பதினால் ஒளி மறைக்கப்படும் போது பிரதிப்பலிக்கப்பட்டு அவை ‘வியூ ஃபைண்டர் ’ வழியாக பிம்பத்தைப் பார்க்கப் பயன்படுகிறது. இவ்வகை ஷட்டர்கள் 45 டிகிரி கோணத்தில் ஃபிலிம் கேட்டின் (Film Gate) முன்பாக சுழலும் அச்சில் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு வகை ஷட்டர்களிலும் - ஒளியானது படச்சுருளில் விழாமல் ஷட்டர்களினால் தடுக்கப்படும் போதுதான் படச்சுருளானது 'புல் டவுன்’ அமைப்பினால் கீழே தள்ளப்படுகிறது.


வியூ ஃபைண்டர் (View Finder)

பதிவு செய்யவிருக்கும் பிம்பங்களைக் கேமராவில் பார்ப்பதற்குப் பயன்படும் அமைப்பு 'வியூ ஃபைண்டர்' என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

1.ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர் (Reflex Viewfinder):
பட்டர்பிளை ஷட்டரில் (Butterfly Shutter) பதிக்கப்பட்டுள்ள கண்ணாடியால் லென்ஸின் வழியாக  ஊடுறுவி வரும் பிம்பத்தை பிரதிபலிப்பதினால் (மாற்றுக் கோணத்தில்)  நாம் வியூ ஃபைண்டரில் அப்பிம்பத்தைப் பார்க்கமுடிகிறது. எனவே பிம்பம் பதிவாகும் அதே நேரத்தில் நம்மால் பிம்பத்தைப் பார்க்க முடிகிறது.

2. நான் ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர் ( Non Reflex Viewfinder):
டிஸ்க் ஷட்டரில் (Disc Shutter) பிம்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இல்லாததனால், பிம்பம் பதிவாகும் போது நம்மால் அப்பிம்பத்தைப் பார்க்க முடியாது. பிரதிபலிக்கும் கண்ணாடி 'டிஸ்க் ஷட்டர்'-இல் இல்லாததனால் இது 'நான் ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர்' என அழைக்கப்படுகிறது.டிரைப்பாட்(Tripod)


கேமராவை நமக்குத் தேவையானபடி நிலைநிறுத்தப் பயன்படும் அமைப்பே ட்ரைபாட் எனப்படுகிறது. தேவையானபடி உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய வசதியோடுகூடிய மூன்று கால்கள் இதில் உண்டு. அதோடு இடவலமாகவும், மேல்கீழாகவும் காமிராவை ஒரு அச்சில் அதிர்வின்றி நகற்றும் வசதியையும் இது நமக்குக்கொடுக்கிறது.

Sunday, February 14, 2010

'ஃபில்டர்ஸ்' (Filters):

'ஃபில்டர்கள்' (Filters) அதன் வழியே ஊடுருவிச்செல்லும் ஒளியின் தன்மையை மாற்றப் பயன்படுகின்றன. அதன் வழியே ஊடுருவிச் செல்லும் ஒளியிலிருந்து தன் வண்ணத்தை அனுமதித்து, பிற வண்ணங்களைத் தடுக்கிறது. ஒளியின் வண்ணத்தை நிர்ணயிக்கும் வெப்ப அளவை (color Temperature) மாற்ற உதவுகிறது, இதைப்போன்ற பல்வேறு பயன்பாட்டுகளுக்காக பல்வேறு விதமான ஃபில்டர்கள் பயன்படுகின்றன. இவற்றை லென்ஸின் முன்பாகவோ, விளக்கின் முன்பாகவோ அல்லது ஜன்னலிலோ, கதவிலோ பொருத்திப் பயன்படுத்தி ஒளியை நமக்குத் தேவையானபடி மாற்றிக் கொள்கிறோம்.

'ஃபில்டர்கள்'  தூய்மையான கண்ணாடியால் தயாரிக்கப்படுகின்றன. அல்லது 'ஜெல்ஸ்' (Gels) என்றழைக்கப்படும் 'பாலிஸ்ட்டர்’ அல்லது  'பிளாஸ்டிக்’-ஐப் பயன்படுத்தி, அதில் தேவையான 'ஜெலட்டின்' கண்ணாடிகளை இணைத்தும் தயாரிக்கப்படுகின்றன.


'ஃபில்டர் ஃபேக்டர்' (Filter Factor):

'ஃபில்டர்கள்' (Filters) மூலம் உட்செல்லும் ஒளியில் குறிப்பிட்ட அளவு ஒளியை 'ஃபில்டர்கள்' உறிஞ்சிக் கொள்கின்றன (Light Absorption). அதாவது நம் வீடுகளில் திறந்திருக்கும் ஜன்னலை விட மூடப்பட்ட கண்ணாடி ஜன்னல் வழியே வரும் ஒளியின் அளவு குறைந்து விடுவதுப் போல. ஒரு பொருளின் வழியாக ஊடுருவும் ஒளியானது அப்பொருளால் கொஞ்சம் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்தானே.!

அதனால் நாம் ஒளிப்பதிவு செய்யும் போது உறிஞ்சிக்கொள்ளப்படுகின்ற ஒளியின் அளவைப்பொறுத்து 'எக்ஸ்போஷர்' (Exposure) அளவை அதிகரிக்க வேண்டியதாகிறது. ஏனெனில் அப்போதுதான் ஒளியமைப்பில் உள்ள ஒளியின் அளவோடு ஃபில்டரால் உறிஞ்சப்பட்ட ஒளியின் குறைவை நேர்செய்ய முடியும். உறிஞ்சிக்கொள்ளப்படும் ஒளியின் அளவையும் அதன் பொருட்டு அதிகரிக்கும் எக்ஸ்போஷர்-ஐயும் முறையே 'ஃபில்டர் ஃபேக்டர்' மற்றும் 'எக்ஸ்போஷர் காம்பன்ஷேன்’ (Exposure compensation) என்கிறோம்.'ஃபில்டரின்' வகைகளும் பயன்பாடுகளும்:

'அல்ட்ரா வயலட் ஃபில்டர்' (Ultra Violet Filter (UV) - புற ஊதா): இயற்கைக் காட்சிகளை, குறிப்பாக சமவெளிகளை ஒளிப்பதிவு செய்யும் போது 'அல்ட்ரா வயலட் ஃபில்டர்'களை உபயோகிப்பதன் மூலம் தேவையில்லாத புற ஊதாக் கதிர்கள் படச்சுருளில் பதிந்து காட்சியின் தரத்தைக் கெடுக்காமல் தடுக்கலாம். மேலும் லென்ஸின் முன் பொருத்துவதன் மூலம் லென்ஸில் கீறல் விழாமல் தடுக்க முடியும். HMI மற்றும் சில 'ஃபுளோரசன்ட்' (Flourescent) விளக்குகளில் பயன்படுத்துவதன் மூலம் அவ்விளக்கிலிருந்து வரும் தேவையற்ற புறஊதாக் கதிர்களைத் தடுக்க முடியும்.

'போலரைஸிங் ஃபில்டர்' (Polarizing Filter): கண்ணாடி, தண்ணீர் போன்ற பிரதிபலிக்கும் தன்மைகொண்ட பொருள்களிலிருந்து பிரதிபலிக்கும் காட்சிகளைத் தடுக்கப் பயன்படுகின்றன இவ்வகையான ஃபில்டர்கள். ஒளியானது பிரதிபலித்து பல திசைகளில் பரவும் தன்மை கொண்டது. 'போலரைஸிங் ஃபில்டர்' ஒளியின் இத்தன்மையைத் தடுத்து ஒரே திசையில் செல்ல வைக்கும். வண்ணங்களின் அளவை அதிகரிக்கவும் நீல வானத்திலிருக்கும் (Blue Sky) நீல வண்ணத்தைக் கூட்டவும் பயன்படுகிறது.

'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்' (Neutral Density - ND): தன்னுள் செல்லும் ஒளியின் அளவை மட்டும் குறைத்து, ஒளியின் மற்ற எந்தத் தன்மையையும் மாற்றாத ஃபில்டர் ஆகையால், இதனை 'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்' என அழைக்கிறோம். அதாவது லென்ஸின் வழி ஊடுருவிச் செல்லும் ஒளியின் அளவை குறைக்க இவ்வகை ஃபில்டர்களைப் பயன்படுத்துகிறோம். லென்ஸில் அதிகமான 'அப்பெர்ச்சரை' (aperture)-ஐ  உபயோகிக்க 'நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டர்' பயன்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் ஒளிப்பதிவு செய்யும் போது அதிகமான ஒளி இருந்தாலோ, வேகமான படச்சுருள் (Fast Film) பயன்படுத்தும் சமயங்களிலோ இது அதிகமாக பயன்படுகிறது.

'கிராஜுயேட்டட் ஃபில்டர்' (Graduated Filter): தூய்மையான கண்ணாடியில் ஒரு பகுதி மட்டும் அதாவது மேலிருந்து கீழ் நோக்கிக் குறைந்து வரும் வகையில் (Gradient) வண்ணமோ, நியுட்ரல் டென்சிட்டி ஃபில்டரோ அமைக்கப்பட்டிருக்கும். பிம்பத்தில் ஒரு பகுதிலிருக்கும் ஒளியைக் குறைத்தோ அல்லது வண்ணத்தைக் கூட்டியோ, குறிப்பாக வானத்தை ஒளிப்பதிவு செய்யும்போது காட்சியின் அழகை கூட்ட பயன்படுகிறது. இது 'கிராட் ஃபில்டர்'(Grad Filter) எனவும் அழைக்கப்படுகிறது.

'கலர் டெம்ப்பரேச்சர் ஃபில்டர்ஸ்' (Color Temperature Filters): இவை ஒளியின் வண்ணத்தைக்கொடுக்கும் வெப்ப அளவை (Color Temperature) மாற்றக்கூடிய தன்மை கொண்டவை. அதாவது 5500K ஒளியை 3200K ஒளியாகவோ, அல்லது எதிர்மறையாகவோ (from 3200k- 5500K)  மாற்றக்கூடிய தன்மை கொண்டவை இவை. இதன் முலம் 'டே ஃபிலிமை' (Day Film) 'டங்ஸ்டன் லைட்டில்' (Tungsten Light) உபயோகப்படுத்த முடிவது போல, 'டங்ஸ்டன் ஃபிலிமை', 'டே லைட்டில்' உபயோகிக்கவும் முடியும். விளக்குகளை மாற்றி உபயோகிக்கவும் முடியும்.

மேற்குறிப்பிட்ட வகைகளைத் தவிர மேலும் பலவகையான ஃபில்டர்களும் பயன்பாட்டில் உள்ளன. சில உதாரணங்களைப் பார்ப்பதானால், 'லோ கான்ட்ரஸ்ட் ஃபில்டர்' (low-Contrast Filters) காட்சியின் வெளிச்சம் மற்றும் நிழலுக்கான விகிதத்தை (Contrast) குறைக்கவும், 'டிஃபுஷன் ஃபில்டர்' (Diffusion Filter) காட்சிப் பதிவில் தேவையான அளவு துல்லியத்தைக் குறைப்பதன் மூலம் காட்சிக்கு அழகூட்டவும்,  'என்ஹன்ஸர் ஃபில்டர்' (Enhancer Filter)- வண்ணத்தை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. 'ஃபாக் ஃபில்டர்' (Fog Filter), 'ஹாஸ் ஃபில்டர்' (Haze Filter) போன்றவை காட்சியமைப்பை அழகூட்டப் பயன்படுகின்றன.அதிகமாகப் பயன்படும் ஃபில்டர்கள்:

#85 - 'டங்ஸ்டன் ஃபிலிமை' (Tungsten Film), 'டே லைட்டில்' (Day Light) உபயோகிக்கப் பயன்படுகிறது.

#80A - 'டே ஃபிலிமை', 'டங்ஸ்டன் லைட்டில்' உபயோகிக்கப் பயன்படுகிறது.

'கலர் கரெக்ஷன் ஃபில்டர்' (Color correction Filters): ஒளியின் வண்ணங்களை மாற்ற உபயோகிக்கப்படுகிறது. தன்னுள் செல்லும் ஒளியில் தன் வண்ணத்தை மட்டும் அனுமதித்து மற்ற ஒளிகளைத் தடுப்பதன் மூலம் ஒளியின் வண்ணத்தை மாற்றுகின்றன.