முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னுடைய மூன்று படங்கள்:



2002-இல் திரைத்துறைக்கு வந்தேன். இல்ல.. இல்ல.. அதை இப்படிச் சொல்ல முடியாது. 2002-இல் சென்னை வந்தேன். திரைத்துறையில் காலெடுத்து வைக்கும் எண்ணத்தில். ஆனால் அது நிகழ இரண்டு ஆண்டுகள் ஆயின. அது அவ்வளவு சுலபமில்லை என்பதும் புரிந்தது. பல கனவுகள் சுமந்த காலம் அது. கடந்து வந்தப் பாதை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி, அர்த்தமற்று போக செய்த காலங்களின் தொடர்ச்சி ஒன்று நிகழ்ந்தது. நம்பிக்கைகளின் மேல் பாரம் சுமந்த நாட்கள் பல கடந்து வந்திருக்கிறேன். 2003 பிற்பாதியில் அல்லது 2004-இல் தான் திரைத்துறையினுள் நுழைய முடிந்தது.

2008-இல் இயக்குனர் ‘ராஜேஷ் லிங்கம்’ இயக்கிய ‘புகைப்படம்’ என்னும் திரைப்படத்தின் வாயிலாக ஒளிப்பதிவாளனாகும் வாய்ப்பைப் பெற்றேன்.  என்னப்பற்றி அறியா, புதிய நண்பர்களுக்காக இங்கே சில தகவல்களை பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன். நான் பணி புரிந்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டும் 2010-ஆம் ஆண்டில் வெளியாகியன. இரண்டும் வணிக ரீதியாக தோல்விப்படங்கள். அதனால் பலர் பார்க்காமல் தவற விட்டிருக்கலாம். இரண்டு படங்களிலும் வெவ்வேறான தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம். இரண்டு படங்களிலும் வெவ்வேறான ஒளிப்பதிவு நுணுக்கத்தை, ஒளியமைப்பு முறையை பயன்படுத்தினோம். காரணம் இரண்டும் வெவ்வேறான கதைக்களன் மற்றும் திரைமொழி கொண்டது. அதன் பிறகு வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டேன். காரணம் தோல்விப்படங்கள் கொடுத்த பயம். காத்திருந்தாலும் பரவாயில்லை என்று நல்ல கதைக்கும், தகுந்த குழுவிற்கும் காத்திருந்தேன். 2011-2012-ஆம் ஆண்டுகளில் அப்படியான இரண்டு படங்கள் வந்தது. ஆனால், அவை சில காரணங்களால் இன்னும் முழுமையடையவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இரண்டு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொண்டேன். ஒன்று ‘அழகு குட்டி செல்லம்’ மற்றொன்று  ‘தொட்டால் தொடரும்’.

‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பிற்தயாரிப்பு பணிகளில் (Post Production) இருக்கிறது. இவ்வாண்டின் முதல் தேதி இப்படத்தின் 'First Look Teaser' வெளியிடப்பட்டது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. படத்தைப்பற்றியும் அதில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் இப்படத்தில் கையாண்ட தொழில்நுட்பங்களைப்பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.

படம்: அழகு குட்டி செல்லம்
இயக்கம்: சார்லஸ்
தயாரிப்பு: ‘நீயா நானா’ ஆண்டனி
ஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட்ராங் (நான்தான்)
இசை: வேத் சங்கர் சுகவனம்
பாடல்: நா.முத்துகுமார்
படத்தொகுப்பு: பிரவீன் பாஸ்கர்
கலை: கே. கலை முருகன்
வசனம்: ஐய்யப்பன்



----------------------------------------------------------------------------------------------------------

புகைப்படம்:



பசுமையான கொடைக்கானலின் மடியில் அமைந்த கல்லூரியில் பயிலும் ஏழு மாணவர்களின் கல்லூரிக்காலத்தை இந்தப்படம் விவரிக்கிறது. நான்கு ஆண்கள், மூன்று பெண்கள். இவர்களின் நட்பு, காதல் பற்றியான ஒரு பகிர்வு இந்தப்படம்.

இதன் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமையை முடிந்தவரை கொண்டுவர முயன்றிருக்கிறேன். மென்மையான ஒளிகளை பயன்படுத்தி இருக்கிறேன்.

காட்சிப்படுத்துதல், எடிட்டிங், இசை, சிறப்பு சப்தம் என்று எதிலும் இன்றைய நவீன திரைப்படங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கதைச்சொல்லல் (Camera Shake, Zooming, Fast Cut, Swish Pan, Flash Sounds) முறையைப் பயன்படுத்தவில்லை.

ஒரு மென்மையான கதை அதன் போக்கில் நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கும் இயக்குனருக்கும் முதல் படம். முதல் முயற்சி. முதல் முயற்சிக்கே உரிய எல்லா சாத்தியங்களையும், குறைகளையும் இப்படம் கொண்டுள்ளது.

இப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

2006 காலகட்டத்திலேயே ‘Super16MM’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படமெடுக்கலாம் என்ற கருத்தோட்டம் பரவலாக இருந்தது. திரைப்படத் தயாரிப்பு தொழிலிலிருக்கும் செலவினங்களை குறைக்கும் விதமாக இத்தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் சாத்தியத்தை ஆலோசித்தார்கள். மேலும் DI- என்னும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தக் கால கட்டம் அது. ஆகையால் இரண்டு தொழில்நுட்பங்களையும் இணைப்பதன் மூலம் ஒரு புதிய சாத்தியத்தை நிகழ்த்த முடிந்தது. சிறிய 16MM படச்சுருளில் படமெடுத்து பின்பு DI-மூலம் நமக்கு தேவையான தரத்தில் மாற்றிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தது.


‘புகைப்படம்’ ஒரு சிறிய/புதிய பட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம். மேலும் அதன் நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை புதியவர்கள் என்பதனால் S16mm தொழில்நுட்பத்தை பயன்படுத்த எண்ணினோம். (S16mm ஆல் விளையும் பயன்பற்றி அறிய என்னுடைய இந்த கட்டுரையைப் பார்க்கவும்)

நாங்கள் படத்தை துவங்கிய காலகட்டத்தில் தமிழில் எந்தப்படமும் S16mm-இல் எடுக்கப்பட்டு வெளியாகி இருக்கவில்லை. நான் பரிந்துரைத்தபோது முதலில் தயங்கிய இயக்குனர் ராஜேஷ் பின்பு என் மீதிருந்த நம்பிக்கையினால் ஒத்துக்கொண்டார். அப்போது எனக்கும் கூட S16mm-இல் படமெடுத்து அனுபவமில்லை. முழுக்க முழுக்க படிப்பறிவுதான். ஏட்டுச் சுரைக்காய். கறிக்கு உதவுமா என்று தெரிந்துக்கொள்ள 'Test' எடுத்தோம். எடுத்துப்பார்த்த காட்சிகள் திருப்தி அளித்ததின்பேரில் அத்தொழில்நுட்பத்தைத் தொடரலாம் என்று முடிவெடுத்தோம். மேலும் அக்காலகட்டத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் நிகழ்வதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படப்பிடிப்பைக் கொடைக்கானலில் நடத்தலாம் என்று முடிவாயிற்று. ஆனால் கொடைக்கானலின் குறைந்த ஒளிக்கு S16mm தாங்குமா என்றொரு சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்நிலையில் நாங்கள் வேறு தொழில்நுட்பத்திற்கு மாறும் சாத்தியமற்று இருந்தோம். காரணம் S16mm-ஐ அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத் தரவுகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. 35MM-க்கு மாறும் அளவிற்கு பொருளாதாரம் இல்லை என்பது ஒருபுறம். டிஜிட்டலுக்கு மாறும் விதத்தில் டிஜிட்டல் அன்று வளர்ந்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணம். அதனால் S16mm-இலேயே படமெடுப்பது என்று முடிவாயிற்று. எனக்கும் இயக்குனருக்கும் ஒருவித நம்பிக்கை இருந்தது. படைப்புதான் பிரதானம். தொழில்நுட்பமல்ல என்பதுதான் அது. தொழில்நுட்பங்கள் வெறும் கருவிகள்தான், அதைக்கொண்டு சாத்தியமாக்கும் படைப்பே அதன் மேன்மைக்கு ஆதாரம் என்று நினைத்தோம். எனக்கும் கூட குறைந்த ஒளியில் S16mm-ஐ பயன்படுத்துவதிலிருக்கும் சவால் பிடித்திருந்தது. அதன் குறைகளை படைப்பாக்கத்தின் மூலம் நிவர்த்தி செய்து விடலாம் என்று கருதினேன்.
எனினும் அத்தொழில்நுட்பத்தின் குறைபாடுகளான 'Low Resolution, Grains' போன்றவை சில இடங்களில் நான் விரும்பாத பிம்பங்களைக் கொடுத்துள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்த S16 படங்கள் (சுப்பிரமணியபுரம், மாயாண்டி குடும்பத்தார், பசங்க..) பெரும்பாலும் வெய்யில் பிரதேசங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமே குளிர்ப்பிரதேசமும் குறைந்த வெளிச்சமும் கொண்ட கொடைக்கானலில் எடுக்கப்பட்டப் படம்.

மொத்ததில் ஒரு இயல்பான நெகிழ்வான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறோம். ஒளிப்பதிவும் அதை மனதில் கொண்டே செய்யப்பட்டிருக்கிறது.

படம்: புகைப்படம்
இயக்கம்: ராஜேஷ் லிங்கம்
தயாரிப்பு: மணிகண்டன் (மாய பஜார் சினிமாஸ்)
ஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட்ராங் (நான்தான்)
இசை: கங்கை அமரன்
பாடல்: நா.முத்துகுமார்
படத்தொகுப்பு: பி.லெனின்
கலை: ஆரோக்கியராஜ்
...




"One facet that uplifts the movie in many places is the great cinematography and wonderful depiction of beautiful Kodaikanal" - Galatta சினிமா

"Vijay Armstrong's camera work is commendable" - The Hindu

"Technically, the film top-notches with colorful visuals offering a pleasant touch to film’s ambience" - "What Works: Second half, Cinematography" - Top 10 Cinema 

"விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு கொடைக்கானல் குளிரை அள்ளித் தெளிக்கிறது" - தமிழ் கூடல்.com

"Vijay Amstrong's camera captures Kodaikanal as pleasing as it could be" - IndiaGlitz

"Vijay Armstrong's lens beautifully captures the scenic beauty of Kodaikanal" - DC

"The camera has been handled very well, capturing the scenic beauty of the landscape"
-Behing Woods

"Cinematography was top notch" - Bharatstudent.com

"Vijay Amstrong's camera captures Kodaikanal as pleasing as it could be" - IndiaGlitz


--------------------------------------------------------------------------------------------------


'மாத்தியோசி'





வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அவ்விளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்.

சுட்டெரிக்கும் வெய்யிலையும், புழுதியையும், வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.

படத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Image'கொண்டுவர முயன்றோம். பெரும்பாலான காட்சிகள் பகலில் நடக்கின்றன.

இரண்டாம் பகுதியில், சென்னையை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றோம். சென்னையின் பல காட்சிகள் இரவில் நடக்கின்றன. இங்கு ஒளியமைப்பு என்பது தெருவிளக்கு, குளிர்காய ஏற்றப்பட்ட நெருப்பு, சன்னல் வழியாக கசியும் ஒளிகள் என அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்து அதன் இயல்பிலேயே பயன்படுத்தினோம். ஒளியமைப்பின் ஆதார தொழில்நுட்பங்களைப் பின்புலமாக மட்டுமே கொண்டோம். ஒளிமயமான, பரபரப்பான சென்னையை இந்தப்படம் காட்டவில்லை. புறநகரப் பகுதிகளிலேயே பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது. அதனால் பளப்பளப்பான சென்னை இந்தப்படத்தில் இருக்காது.

மொத்ததில் இந்த படம் 'ஃபேண்டஸி' வகைப்படம் அல்ல. எதார்த்த சூழ்நிலைகளில் நிகழும் வன்முறைகளையும், அதன் விளைவுகளையும் காட்ட முயன்ற ஒரு 'அடிதடி' படம். அதை மனதில் கொண்டே இந்தப்படத்தின் ஒளிப்பதிவைச் செய்தேன்.

கிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென்சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதனால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.

முதல் பகுதியில் 'சூரிய உதயம்' மற்றும் 'சூரிய அஸ்தமனம்' ஆகியவை கால மாற்றத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டன. சென்னையில் 'பிறை நிலா' முதல் 'முழு நிலா' வரை அதற்காக பயன்படுத்தப்பட்டன. படம் சுட்டெரிக்கும் வெய்யிலில் துவங்கி மழையில் முடிகிறது.

இப்படம் S35mm தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது. S35mm தொழில்நுட்பத்தைப்பற்றி அறிய என்னுடைய இக்கட்டுரையைப் பார்க்கவும்.

படம்: மாத்தியோசி
இயக்கம்: நந்தா பெரியசாமி
தயாரிப்பு: சேகர் ரெட்டி
ஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட்ராங் (நானேதான்)
இசை: குரு கல்யாண்
பாடல்: சிநேகன்
படத்தொகுப்பு: கோலா பாஸ்கர்
கலை: சந்தானம்



"Cinematographer Vijay Armstrong indulges in an interesting interplay of dark and light tones" - The Hindu

"கரடுமுரடான காடுமேடுகளில் தானும் ஒரு கதாப்பாத்திரமாக அலைஞ்சிருக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிராமத்தினுடைய அடர்ந்த வெளிகளிலும் நிரந்தரமாக பதிஞ்சுகிடக்கிற வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்" - Sun TV 


"ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும் சரி சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-கிடம் இருக்கிறது" - ஹாசினி பேசும் படம்  

கருத்துகள்

  1. உண்மையான உழைப்பிற்கு பலன் உண்டு... தாமதம் ஆனாலும் ஒரு நாள் கிட்டும்... இந்த வருடம் அனைத்தும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங்க். இனிவரும் உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையட்டும். உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சுரேஷ் கண்ணன் சார். கண்டிப்பாக தொடர்ந்து பகிர்ந்துக்கொள்ள முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் திரைப்பட உலகின் பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால் படம் வெற்றிப் பெற்றால் மட்டும்தான் படத்தின் கலைஞர்கள் கவனிக்கப்படுகிறார்கள் ஆகவே நல்ல கதையம்சம், நல்லதொரு குழுவுக்காக காத்திருத்தல் என்ற உங்கள் முடிவு மிகச் சிறந்தது. அதற்கு அசாத்தியமான துணிச்சல் தேவை. அது உங்களுக்கு இருக்கிறது ஆம்ஸ்ட்ராங் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் . நீங்கள் பணியாற்றிய படங்கள் தரத்தில் மிகச்சிறந்தவைதான் அவற்றில் உங்கள் பங்கும் அபாரமானது.. தெளிவான தொழில்நுட்ப அறிவும் , நல்ல சினிமாவுக்கான தாகமும் உடைய உங்களுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்.. குறிப்பிட்ட இரு படங்களிலுமே ஒளிப்பதிவை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.. ஒளிப்பதிவைப் பொறுத்த வரை அவை வெற்றிப் படங்களே.. உங்களது தற்போதைய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. இனிய ஒளிப்பதிவாளரே...!
    வணக்கம்.
    உழைப்பின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. உங்கள் உழைப்பு உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.
    கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் மற்றும் இயக்குநர் சார்லஸின் 'அழகுக்குட்டி செல்லம்' இவ்விரு படங்களின் வருகைக்காக காத்திருக்கிறேன். முதல் படத்திலேயே பாராட்டுகள் பெற்றவர் இத்தனை அறிவு அபிவிருத்திக்குப் பிறகு நிச்சயம் நிறையச்செய்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
    பேராசிரியர் பி.ஜி.கதிரவன், மதுரை
    [email protected]

    பதிலளிநீக்கு
  7. நன்றி பாரதி குமார் சார்..

    பதிலளிநீக்கு
  8. நன்றி அசிஸ்டண்ட் டைரக்டர்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அண்ணா
    தங்களின் “புகைப்படம்“ திரைப்படத்தின் ஒளிக்கலவையை கூர்ந்து ரசித்தவரில் நானும் ஒருவன் ஆனால் எனக்கு ஒளிப்பதிவு நுணுக்கங்கள் பல தெரியாது....
    ஈழத்தில் குறும்பட இயக்குனராக வளர்ந்து வரும் எனக்கு தங்கள் வலைப்பதிவு பற்றி இது நாள் வரை தெரியாது இனி தொடரலாம்...

    தங்களது “தொட்டல் தொடரும்“ படத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் காரணம் அது எனது அபிமான அண்ணாவான சங்கர்ஜி படம் என்பது போக இப்போ தாங்களும் இணைந்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  10. Ungal thiramayaum & uzhappaiyum angigarikkum vidhamaaga ippadangal amaya vendum, anbu thambi
    Sridhar

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன